3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

இலங்கையில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று  ஆரம்பமாகியுள்ளன.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும்   ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

சுகாதார விதிமுறைமைகள் பின்பற்றப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவர் அல்லது பாடசாலை பணிக்குழாமில் எவரேனுக்கும் கொரோனா  தொற்றுக்கான நோய் அறிகுறிகள் காணப்பட்டால் பாடசாலைக்கு சமூகமளிக்காமல் இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் பாடாசலைக்கு சமூகமளித்த எவரேனுக்கும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக ஏனையவர்களுடன் விலகிச் சென்று தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அல்லது ஓய்வினை பெற வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வெலிஓயா பகுதியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து ஹட்டன் கல்வி வலயத்தில் மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகியன திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள 83 பாடசாலைகளில் 81 பாடசாலைகளே இன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் பல பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதை காலவரையின்றி ஒத்திவைக்க வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லூரே தீர்மானம் எடுத்துள்ளார்.

முன்னதாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், பாடசாலைகளை திறந்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து விடாதீர்கள் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்து.