2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி!

2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு பிரித்தானியாவில் ஒரே நாளில்  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரித்தானியாவில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஹான்காக் கூறும்போது,

“பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தியுள்ளோம். வாரத்திற்கு 20 இலட்சம் பேருக்கு  கொரோனா தடுப்பு மருந்து போடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

பிரிட்டனில் மட்டும் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக்  கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தெற்கு இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கொரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவிற்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

இதையடுத்து ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.