150 அகதிகளை குடியமர்த்த தயார்: நியூசிலாந்து மீண்டும் அறிவிப்பு

ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு பாப்புவா நியூகினி தீவில் உள்ள அகதிகளில் 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்துவதாக, ஐந்து வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியின்படி இன்னமும் செயற்படத்தயாராக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern மீண்டும் தெரிவித்துள்ளார்.

நவுறு மற்றும் பாப்புவா நியூகினி தீவிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால், அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதை எளிதாக்கும் Medevac சட்டத்தை அரசு மீளப்பெறுகின்ற பின்னணியில், நியூசிலாந்தில் அகதிகளை குடியமர்த்தும் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக நாடாளுமன்ற செனட் அவையில் Medevac சட்டத்தை மீளப்பெறுவதற்கு சுயாதீன செனட்டர் Jacqui Lambie-இன் ஆதரவு தேவைப்பட்டதையடுத்து அவருடன் பேச்சு நடத்திய அரசு, அவர் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்கியதன்மூலம் இச்சட்டத்தை மீளப்பெறுகின்றது.

இந்நிலையில் செனட்டர் Jacqui Lambie விதித்த நிபந்தனைகளில், நியூசிலாந்தில் அகதிகளை குடியமர்த்தும் விவகாரமும் ஒன்று என தகல்கள் கசிந்துள்ளன.

ஆனால் அவ்வாறான நிபந்தனை எதற்கும் அரசு இணங்கவில்லை என பிரதமர் ஸ்கொட் மொறிசன் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தப்பின்னணியில் நியூசிலாந்தில் அகதிகளை குடியமர்த்தும் விடயம் தொடர்பில் ஆஸ்திரேலியா சார்பில் எந்தவித கருத்துப்பரிமாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் Iain Lees-Galloway தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வருடமொன்றுக்கு பாப்புவா நியூகினி தீவில் உள்ள அகதிகளில் 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்துவதாக தமது அரசு வழங்கிய உறுதிமொழி குறித்து ஆஸ்திரேலிய அரசு நன்கு அறியும் என்றும், இது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசுதான் முடிவெடுக்கவேண்டும் என்றும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern  தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலீடாக தமது அரசு எதையும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நவுறு மற்றும் பப்புவா நியூகினியில் உள்ள அகதிகளை மூன்றாவது நாடொன்றில் குடியேற்றும் முயற்சி தொடர்வதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அரசு, நியூசிலாந்தின் சலுகையினைத் தொடர்ச்சியாக நிராகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- SSB தமிழ்