13ஆம் திருத்தம் சாத்தியமில்லை: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற பொய் வாக்குறுதிகள் வழங்க தாம் விரும்பவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யூரியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்த அவர், 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நடக்காத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைபடுத்துவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அதிகாரங்களை கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும். கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. நாங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உண்மையை கூற வேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் அனைத்து தலைவர்களும் தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் காலாசாரத்தில் பின்னிப்பிணைந்தவர்கள். இன்று சில தலைவர்கள் வடக்குக்கு சென்றால் சிங்கள கலாசாரத்தை மறுந்து விடுகின்றனர். தமிழ் – சிங்கள கலாசாரங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையில் இரு இனங்களும் ஒன்றாக இணைய முடியும் என்றால் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வைத் தேடி செல்லலாம் என்று அவர் கூறியுள்ளார்.

வடக்கில் அனைத்து அபிவிருத்தியும் மஹிந்த ராஜபக்ச காலத்தில் உருவாக்கியதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனோ. ஏனைய தலைவர்கள் உருவாக்கியதோ அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் பகுதிக்கு கிடைக்கும் அதிகாரங்கள் வடக்குக்கும் வழங்க வேண்டும். வடக்கில் அரசியல் ரீதியாக பல கோரிக்கைகள் இருக்கின்றன. அதற்கு எமது ஆட்சியில் தீர்வுகள் உண்டு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.