இலங்கையில் 13வது திருத்தம் : எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

இலங்கையில் 13வது திருத்தம்

இலங்கையில் 13வது திருத்தம்: இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, 7 தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கைக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இலங்கையில், ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது. ”கடந்த 70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக” தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.”இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக” அவர் குறிப்பிடுகிறார். ”அரசியலமைப்பின் 13வது திருத்தமானது, இனப் பிரச்சினைக்கான தீர்வு இல்லை” என கோரியே இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மோடிக்கு கடிதம் எழுதிய தரப்பின் பதில் 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, வட மாகாண சபையை மீண்டும் கொண்டு வரவே தாம் முயற்சித்து வருவதாக, வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கிறார். 13வது திருத்தச் சட்டமானது, தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாது என்பதனை தாமும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறுகின்றார். அரசியலமைப்பில் தற்போதுள்ள சட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே தாம் கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

நன்றி-பிபிசி  Tamil News