13 ஆவது திருத்தமும் சீனாவும்;மோடியின் நகர்வின் பின்னணி – கொழும்பிலிருந்து அகிலன்

“13 ஆவது திருத்தம்” மீண்டும் பேசுபொருளாகியிருக்கின்றது. எப்போதும் பேசுபொருளாக இது  இருக்குமே தவிர, இது ஒருபோதும் தீர்வாகப் போவதில்லை. இதனை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும்  நடைமுறைப்படுத்தப்படப் போவதுமில்லை.

இதற்கு மேலாகச் சென்று ஒரு தீர்வை வழங்கப் போவதுமில்லை. இதுதான் யதார்த்தமாக இருந்தாலும், சிறிலங்காவும், இந்தியாவும் “தமது தேவைக்கேற்ற” இதனைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும். ஆனால், ஆகப்போவது எதுவும் இல்லை. இப்போது நடைபெற்றிருப்பதும் அதுதான்.

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ புதுடில்லிக்கு மேற்கொண்ட ‘கன்னி’ விஜயத்தின் போது, 13 குறித்த பேச்சுக்கள் மீண்டும் இடம்பெற்றிருக்கின்றது.  ’13’ ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பகிரங்கமாகவே கேட்டுக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதற்காக மறைமுகமான அழுத்தங்களைக் கொடுத்தார். ஆனால், அதற்குத் தான் தயாராகவில்லை என்பதை வீறாப்புடன் கூறிவிட்டுத்தான் கோத்தாபய கொழும்பு திரும்பியிருக்கின்றார்.

இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்றை இது உருவாக்கியிருக்கின்றதா?

13 ஐ குறித்து இல்லாவிட்டாலும், சீனா தொடர்பில் சிறிலங்காவின் அணுகுமுறை எப்படியிருக்கின்றது என்பதைத்தான் புதுடில்லி உன்னிப்பாக அவதானித்துக் காண்டிருக்கின்றது.

13 ஆவது திருத்தம் இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சிறிலங்கா அரசாங்கம் விரும்பினால் மட்டுமே அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும். இரு நாடுகளுக்குமிடையில் ஒரு “நெருடலை” எப்போதும் 13 ஆவது திருத்தம் வைத்திருக்கும். இது குறித்துப் பேசுவதை நீண்டகாலமாவே தவிர்த்துவந்த இந்தியா இப்போது, அது குறித்துப் பேசியிருப்பது தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு ஒன்று கிடைக்க வேண்டும் என்பதற்காகவல்ல. சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்களைக் கொடுப்பதற்கான ஒரு ஆயுதமாகவே மோடி இதனைப் பயன்படுத்தினார்.1487442337i3 13 ஆவது திருத்தமும் சீனாவும்;மோடியின் நகர்வின் பின்னணி - கொழும்பிலிருந்து அகிலன்

மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் 2015 இல் இந்தியா சம்பந்தப்பட்டிருந்தமை இரகசியமானதல்ல. புதுடில்லி மீது அப்போது மகிந்த பகிரங்கமாகவே குற்றச்சாட்டை முன்வைத்தார். சீனாவுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை இலங்கையில் மகிந்த கொடுத்தமைதான் அதற்குக் காரணம். இலங்கையில், சீன பலமாகக் காலூன்றுவது தமது நலன்களுக்குப் பாதகமானது என இந்தியா கருதியதால், ஆட்சி மாற்றத்துக்கு உதவியது.

ஆனால், மைத்திரி – ரணில் அரசும் முன்னைய அரசின் பாதையிலேயே சென்றது டில்லிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக சீனா விவகாரத்தில் அதிரடியாக எதனையும் செய்யவில்லை. அதனால்தான் கடந்த நவம்பர் 16 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை. அதேவேளையில், ஜனாதிபதியாகத் தெரிவானவுடனேயே டில்லிக்கு கோத்தாபயவை அழைத்தது. அழைப்புக் கடிதத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சரே அவசரமாக கொழும்பு வந்தமை கோத்தாவை டில்லிக்கு அழைப்பதில் இந்தியாவுக்கு இருந்த தீவிர அக்கறையை வெளிப்படுத்தியது.

கோத்தா சீனாவுக்கு சார்பான ஒருவராகக் கருதப்படுபவர். அவரது வெற்றியின் பின்னணியில் சீனாவும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. அம்மாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என்பன ஏற்கனவே சீனாவுக்குக்கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில், கோத்தாபய அதிகாரத்துக்கு வருவது தமது பிராந்திய நலன்களுக்கு ஆபத்தானதாகலாம் என்பதால், ஆரம்பத்திலேயே அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது டில்லியின் நோக்கமாக இருந்தது.
டில்லியின் நோக்கம் கோத்தாபயவுக்குப் புரிந்தேயிருந்தது. அதனால்தான், புதுடில்லி புறப்பட முன்னர் இந்திய புலனாய்வுச் செய்தி இணையத்தளம் ஒன்றுக்களித்த நேர்காணலில், சீனா குறித்த இந்தியாவின் அச்சங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சில கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

சீனாவுடனான எமது உறவு பொருளாதார நோக்கங்களைக் கொண்டது.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கும் வகையில் சீனாவுடன் எந்தவிதமான உறவுகளையும் வைத்திருக்கப்போவதில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்குக் கொடுக்கும் ரணில் அரசாங்கத்தின் முடிவுக்கு நான் ஆதரவில்லை. அதனை மீள்பரிசீலனை செய்வோம்.

இந்த வகையில் கோத்தாபய தெரிவித்த கருத்துக்கள் இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கான முயற்சியாகவே இருந்தது. சீனா தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு மட்டுமே கோத்தாபய முற்பட்டாரே தவிர, இன நெருக்கடிக்கான தீர்வு குறித்தோ அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகவோ எதனையும் சொல்வதற்கு அவர் விரும்பவில்லை. அவரைப் பொறுத்தவரையில், பொருளாதார அபிவிருத்தியின் மூலமாக மட்டுமே இனநெருக்கடிக்கான தீர்வைக்காண முடியும். அதாவது, இங்கிருப்பது ஒரு இனப்பிரச்சினையல்ல. இது ஒரு பொருளாதாரப் பிரச்சினை என்பதுதான் அவருடைய நிலைப்பாடு.Wu Jianghao with Gotabaya Rajapaksa 13 ஆவது திருத்தமும் சீனாவும்;மோடியின் நகர்வின் பின்னணி - கொழும்பிலிருந்து அகிலன்

இந்தக் கருத்துடன் டில்லி சென்ற கோத்தாவுக்கு அங்கு அதிர்ச்சிகளே காத்திருந்தது. கோத்தாவை மோடி தனியாகச் சந்தித்த ஹெதராபாத் இல்லம் அவசரம் அவசரமாக புதுப்பிக்கப்பட்டது. இருவரும் தனியாகச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்திய அறையின் சுவர்களை அலங்கரித்த ஓவியங்கள் அவசரமாக மாற்றப்பட்டன. வழமையாக ரவிவர்மாவின் இந்தியாவின் பெருமையைக் கூறும் ஓவியங்களே அதிலிருக்கும். ஆனால், கோத்தாபய சென்றபோது இராமாயணத்தில் வரும் சில காட்சிகள் சுவரை அலங்கரித்தன. அனுமன் இலங்கையை எதித்தது. இலங்கை மீது போர் தொடுக்கப்பட்டது. சீதையை மீட்டது போன்ற ஓவியங்கள் சுவரை அலங்கரித்தன.

சுவரோவியங்களும் அரசியல் பேசின. அதன் மூலம் கோத்தாபயவுக்கு செய்தி தெளிவான ஒன்று சொல்லப்பட்டது. உளவியல் ரீதியாக தாக்கத்தைக் கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு என புதுடில்லியில் இராஜதந்திரிகள் குறிப்பிட்டார்கள்.

பேச்சுக்களின் பின்னர் கூட்டாக ஊடகவியலாளர்களை இருவரும் சந்தித்தார்கள். அதன்போதுதான், “13 ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்பதை இந்தியா எதிர்பார்க்கின்றது” என நரேந்திர மோடி அறிவித்தார். மோடியைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய கோத்தாபய அதற்குப் பதிலளிக்கவில்லை. பொருளாதார அபிவிருத்தி குறித்து மட்டுமே அவர் அப்போதும் பேசினார்.

ஆனால், அதன்பின்னர் இந்தியாவின் முன்னணி நாளிதழ்களான, இந்து, இந்துஸ்ரான் ரைம்ஸ் ஆகியவற்றுக்களித்த நேர்காணலில், “13 ஆவது திருத்தத்தை சிங்கள மக்கள் ஆதரிக்கவில்லை. அதனால், அதனை நடைமுறைப்படுத்த முடியாது” என கோத்தாபய தெரிவித்தார். போர் முடிவுக்கு வந்திருந்த காலகட்டத்தில் 13 க்கு மேலாகச் சென்று தீர்வைக்காண்பது என்ற நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்‌ஷ வெளிப்படுத்தினார். இப்போது 13 ஐ நடைமுறைப்படுத்தக்கூட தான் தயாராகவில்லை என்பதை டில்லியில் வைத்தே கோத்தா அறிவித்துவிட்டார்.

13 ஆவது திருத்தம் இந்தியாவின் குழந்தை என்றாலும் கூட, தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக அதனை விட்டுக்கொடுக்கவும் டில்லி தயாராகவிருக்கும். சீனாதான் இந்தியாவுக்குப் பிரச்சினையே தவிர, ‘13’ அல்ல. கோத்தா அதனை தெளிவாக உணர்ந்துவிட்டார். சீனாவின் நலன்களைவிட இந்தியாவின் நலன்களை அவர் முன்னிலைப்படுத்தினால், ‘13’ குறித்து மோடி பேசமாட்டார். இப்போது நடந்திருப்பதும் அதுதான். தமிழ்த் தரப்பினரும் இதனைப் புரிந்துகொள்வது அவசியம்!