13ஆவது திருத்தம் தொடா்பில் இந்தியா மௌனம் – வியப்பாக உள்ளது என்கிறார் அநுர குமார

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய தரப்பில் எதுவும் பேசப்பாடமை எமக்கு வியப்பாக இருந்தது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் குழு டில்லி சென்றிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தியினர் சந்திப்புகளை நடத்தினர். அமுல் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கும் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டனர்.

இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேளர மாநிலத்துக்கும் சென்றிருந்தனர். இந்திய விஜயத்தின் பின்னர் அவ்விஜயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் முதன்முறையாக ஊடகமொன்றுக்கு நேற்று முன்தினம் நேர்காணல் வழங்கி இருந்தார்.

இதன்போது – இந்தியாவில் நடைபெற்ற சந்திப்புகளின் போது மாகாணசபை முறைமை மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசப்படவில்லையா என எழுப்பட்ட கேள்விக்கு, “உண்மையில் இது குறித்து அவதானமே செலுத்தப்படவில்லை. இது பற்றி பேசப்படாமை எமக்கும் வியப்பாக இருந்தது. எனினும், ஒரேயொரு சந்தர்ப்பத்தின்போது தமிழ், முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெற உள்ள உங்களிடம் வேலைத்திட்டம் என்னவென்று குழுவொன்றினால் எம்மிடம் கேட்கப்பட்டது. அதற்கு நாம் பதில் வழங்கினோம்.

2005இல் தமிழர்களுக்கு எதிராகவே மஹிந்த ஆட்சிக்கு வந்தார். தமிழர்கள் தோற்று விட்டனர் எனக்கூறி 2010 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2019 இல் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். மற்றைய தரப்புக்கு எதிராகவும், அவர்களுக்கு வலியை ஏற்படுத்தியுமேஆட்சிக்கு வருகின்றனர்.

நாம் இந்த அணுகுமுறையை பின்பற்றும் கட்சி அல்ல. அனைவரையும் இணைத்துக்கொண்டு இந்த ஆட்சியை விரட்டவே எதிர்பார்க்கின்றோம். எமது ஆட்சில் வடக்க, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்களும் எமது அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில்தான் செயற்பட்டுவருகின்றோம். அவர்களின் வழி பிரித்தாள்வது. எமது வழி இணைந்து பயணிப்பது எனக் கூறினோம்” என்று அநுரகுமார திஸாநாயக்க பதிலளித்தார்.