சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ்.ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்த நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியிருந்தது.
இதைத்தொடர்ந்து இன்று ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, 13,117 குடும்பங்களைச் சேர்ந்த 44,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 68 பாதுகாப்பு நிலையங்களில் 1,700 குடும்பங்களைச் சேர்ந்த 6,031 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுனியாவில் பெய்துவரும் கடும் மழையால் 1,048 குடும்பங்களை சேர்ந்த 3,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் திருகோணமலை மாவட்டத்தில் 2208 குடும்பங்களை சேர்ந்த 6512 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கே.சுகுனதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா மற்றும் மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வதால் வெள்ள நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.டபிள்யூ.ஏ.சகுரா டில்தாரா தெரிவித்தார்.