மொட்டு அணியிலிருந்து 12 எம்.பி.க்கள் ரணிலுடன் இணையத் திட்டம்? அதிா்ச்சியில் ராஜபக்ஷக்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் எனத் தகல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ஷெஹான் சேமசிங்க, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர, பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுடன் எஸ்.பி திஸாநாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, பந்துல குணவர்தன, சுசில் பிரேமஜயந்த மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமாகவுள்ளனர் என அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற் குறிப்பிட்டவர்களில் பலர் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வருகின்றனர். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இது முற்றிலும் பொய்யான தகவல் எனத்வ்தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மற்றுமொரு தரப்பினர் கட்சி சார்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தால் மொட்டுக் கட்சி பிளவுப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் குறித்து அந்தக் கட்சியில் தலைவர்கள் மௌனம் காத்து வருகின்றனர்.