மியான்மரில் மோசடி மையங்களை (online scam centre) நடத்தி வந்த ஒரு பிரபல மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மிங் குடும்பத்தைச் சேர்ந்த டஜன் கணக்கான உறுப்பினர்கள் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பலருக்கு நீண்ட கால சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
சீன எல்லைக்கு அருகில், மியான்மரின் அமைதியான நகரமான லாவ்கைங்கை (Laukkaing) சூதாட்டம், போதைப்பொருள் மற்றும் மோசடி மையங்களின் மையமாக மாற்றிய நான்கு குடும்பங்களில் ஒன்றுக்காக இந்த மிங் குடும்பம் செயல்பட்டு வந்தது.
இதையடுத்து, மியான்மர் கடும் நடவடிக்கைகளை எடுத்து, இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பலரை 2023-ஆம் ஆண்டில் கைது செய்து சீன அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
இதில் ஏற்கனவே மிங் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 39 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 உறுப்பினர்களைத் தவிர மேலும் 5 பேருக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டது. 11 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். மீதமுள்ளவர்களுக்கு 5 முதல் 24 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டன.
நீதிமன்றத்தின் விசாரணையில், 2015-ஆம் ஆண்டு முதல் மிங் குடும்பம் மற்றும் பிற கிரிமினல் குழுக்கள் தொலைத்தொடர்பு மோசடி, சட்டவிரோத சூதாட்ட விடுதிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.