மஹர சிறைக் கைதிகள் 11 பேர் சுட்டுக் கொலை : குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 11 கைதிகளைக் சுட்டுக் கொன்றது குற்றம் என வெலிசறை நீதிவான் துசித தம்மிக்க உடவவிதான தீர்மானித்தார். 

குற்றத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அனைவரையும்  கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும்  இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

உயிரிழந்தவர்கள் சுடப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, கலவரத்தை அடக்குவதற்காகவோ, மனிதாபிமான நடவடிக்கைக்காகவோ துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், இறந்தவர்கள் சுடப்பட்ட விதத்தின் அடிப்படையில், சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மஹர சிறைச்சாலையில் கிளர்ச்சியை அடக்குவதற்காக முழங்காலுக்குக் கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்த போதிலும், இறந்த கைதிகள் எவரும் முழங்காலுக்குக் கீழே சுடப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை என நீதிவான் தீர்ப்பளித்தார்.