கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.இன்று மாலை 6.07 மணியளவில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
மூன்று மாவீரர்களின் சகோதரியும் தமிழீழ மாவீரர் பணிமனையின் பொறுப்பாளர் பொன். தியாகம் அப்பாவின் புதல்வியுமாகிய அனந்தி பிரதான சுடரை ஏற்றி வைத்தார்.பெருந்திரளான மக்கள் திரண்டு மாவீரர்களாகிப்போன தமது உறவுகளை நினைந்து கண்ணீர் மல்கச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாள் நிகழ்விற்காக மிகவும் உணர்வுடன் எழுச்சி கண்டது. வழமைக்கு மாறான பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்பு துயிலும் இல்ல வளாகம் எங்கும் நிரம்பிக்காணப்பட்டது.
மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைப்பு குழுவின் ஒழுங்குபடுத்தல்கள் காணப்பட்டன.
இவ்வாறான மக்கள் கூட்டம் உணர்வெழிச்சியுடன் பங்குபற்றுவது என்பது சாதாரண விடயம் அல்ல. எல்லாவற்றையும் விட அதிகமான இள வயதினரின் பங்குபற்றல் என்பது கிளிமண் தனது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் கண்டுள்ளது என்பதை பறைசாற்றுகின்றது.
அவற்றைவிட ஏறத்தாழ எழுபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என கணிக்கக்கூடிய ஒரு மக்கள் கூட்டத்தில் ஒரு குடிபோதை இல்லை, ரவுடித்தனம் இல்லை, கூச்சல்,குழப்பங்கள் இல்லை , ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கூட இல்லை இவ்வாறாக இந் நினைவேந்தலில் இவ்வளவு மக்கள் பங்குபற்றியதானது தமிழ் தேசியம் மீது அந்த மக்கள் கொண்ட ஒப்பற்ற பற்றுஉருதியையே எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் மக்கள் எல்லாம் ஒன்றுபட்டுள்ளார்கள் என்பதையும் அதனை சரியான வழித்தடத்தில் கொண்டுசெல்ல ஒரு தலைமையின் வெற்றிடத்தையுமே சுட்டி நிற்கிறது.
மேலும் நேற்றைய அனுபவத்தின் படி அதிக சனத்தொகையை கருத்திலெடுத்து இனிவரும் காலங்களில் 2008 காலப்பகுதிக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்தவை போல தனிப்பட்ட அறிவித்தல்களை தவிர்த்து எல்லா துயிலும் இல்லங்களின் பணிக்குழுவுடனும் இணைந்து பொதுவான ஒரு குரல் அறிவிப்பை வெளியிடுதல் சிறப்பாக அமையும்.
அத்துடன் துயிலும் இல்லத்தில் இருந்து டிப்போ சந்தி வரைக்குமான போக்குவரத்தை சீர்செய்து ஒழுங்குபடுத்துவதும் பணிக்குழுவின் கடமையில் உள்ளெடுப்பது சிறப்பாக அமையும் ( பலரால் முணுமுணுக்கப்பட்ட விடயம்) ஏனெனில் நேற்றைய சன நெரிசல் ஆனது முரன் பாடுகள் இல்லாவிட்டாலும் துயிலும் இல்லத்தில் இருந்து டிப்போ சந்திக்கு செல்வதற்கு சாதாரனமாக 1.45 மணித்தியாலங்கள் எடுத்துள்ளது.
மீண்டும் துயிலும் இல்ல மக்கள் எழுச்சியானது ஏதோ ஓர் வெற்றிடம் மட்டும் இடைவெளியாக உள்ளதே தவிர மக்கள் என்றும் உணர்வு ரீதியாக ஒன்று படுவார்கள் என்ற செய்தியை பலரது கன்னங்களில் ஓங்கி அறைந்திருக்கின்றது.
முல்லையூர் இராஜ்குமார்