ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் தொடர் தாக்குதல்களின் காரணமாக எல்லைப்புற பலஸ்தீன கிராமங்களில் குடியேறிய இஸ்ரேலிய மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இது வரையில் 300000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஜெருசலம் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது. பெருமளவான மக்கள் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள 105 குடியேற்றங்களளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதேசமயம், 6000 இற்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கடந்த 9 ஆம் நாளிற்கு பின்னர் ரஸ்யாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலிய நகரங்கள் பல தற்போதும் வெறிச்சோடியே உள்ளன. கடைகள் மற்றும் நிறுவனங்கள் பல தற்போதும் மூடப்பட்டுள்ளதுடன், நகரங்களில் மக்கள் நடமாட்டமும் குறைவாகவே உள்ளன. இந்த நிலையில் வேலைசெய்யும் இடங்கள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் இஸ்ரேலிய அரசு சில கட்டுப்பாடுகளை வெளியிட:டுள்ளது. அதன் அடிப்படையில் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களின் பணி நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அமெரிக்க அதிபர் 7 ஆவது தடவை இஸ்ரேலிய பிரதமருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தரை தாக்குதலை நிறுத்துவதற்கான அல்லது அதனை தாமதப்படுத்துவதற்கான அழுத்தங்களை மேற்கொண்டுவருவதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளன. பணயக்கைதிகளின் விடுதலை தொடர்பில் அமெரிக்க அதிக அச்சங்களை கொண்டிருப்பதாக தெரிகின்றது.