“INDIA கூட்டணிக்குத் தலைமை தாங்குவீர்களா?” இலங்கை அதிபரின் கேள்வியும், மம்தாவின் பதிலும்!

துபாய் விமான நிலையத்தில் யதேச்சையாக, மம்தா – இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் INDIA என்றக் கூட்டணியை உருவாக்கின. அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் மூன்று கூட்டங்கள் நடந்திருக்கின்றன.

இதில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க துபாய்க்குச் சென்றிருக்கிறார்.

துபாய் விமான நிலையத்தில் யதேச்சையாக, மம்தா – இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ரணில் விக்ரமசிங்க மம்தா பானர்ஜியிடம், “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா… எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா… நாங்கள் அனைவரும் உங்களின் தலைமையை எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.

அதற்கு பதிலளித்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சிரித்துக்கொண்டே, “ஓ மை குட்னஸ்… எங்களின் கூட்டணிக்கு நான் தேர்ந்தெடுக்கப்படுவது மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அது உங்களுக்குத் தெரியும், மக்கள் எங்கள் கூட்டணியை ஆதரித்தால், நாளை நாங்கள் பதவியில் இருப்போம்” எனத் தெரிவித்தார்.