சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை – திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமான 3வது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் திங்கட்கிழமை (03) ஆரம்பமாகியுள்ளது.
இன்றையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டக்காரர்களுக்கு பலாலி காவல்துறையினர் பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலையும் இடர்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினராமான செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு சமூக அக்கறையுள்ள அனைத்து அனைவரையும் அழைத்து நிற்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.