1.4 கோடி தடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்; 5 லட்சம் அன்பளிப்பாக கிடைக்கும்

ஒரு கோடியே 40 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி ஏற்றும் திட்டத்துக்காக இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் சீனாவிடம் இந்தத் தடுப்பூசிகளை கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கைக்கு அமைய ஒரு கோடியே 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கைக்கு மேலும் 5 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு சீனத் தூதரகம் முன்வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாத இறுதியில் 6 இலட்சம் ‘சினோபார்ம்’தடுப்பூசிகளை சீன அரசு அன்பளிப்பாக வழங்கியிருந்தது. இதில் ஒரு தொகை தடுப்பூசி இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்குச் செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கிய தையடுத்து இலங்கை மக்களுக்கு இம்மாதம் 8ஆம் திகதி முதல் இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.