வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்த ஐ.நாவின் சிறுவர் நிதியம் தமிழ் சிறுவர்களை மறந்துவிட்டது

சிறீலங்காவில் இடம்பெறும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம், காணாமல்போன தமிழ் சிறார்கள் மற்றும் பெற்றோரை இழந்து வாழும் தமிழ் சிறுவர்களை மறந்துள்ளது. இது தமிழ் மக்களிடம் ஏமாற்றத்தை தோற்றுவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு சிறீலங்காவில் அரச தலைவராக பொறுப்பேற்கும் வேட்பாளரிடம் சிறுவர் நலன் தொடர்பில் 6 கோரிக்கைகளை ஐ.நா சிறுவர் நிதியம் முன்வைத்துள்ளது.

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதாக சிறீலங்கா தெரிவித்துள்ளது. ஐ.நா விதிகளுக்கு அமைவாக அது இடம்பெறவேண்டும். ஊட்டச்சத்து, கல்வி, வறுமை, தண்டனைகள், இனப்பாகுபாடு, காலநிலை மாற்றம் போன்ற 6 துறைகளில் புதிய அரச தலைவர் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

ஆனால் சிறீலங்கா அரசிடம் அரசியல் கைதிகளாக உள்ள தமிழ் மக்கள் மற்றும் காணாமல்போன தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் சிறுவர்கள் தொடர்பில் ஐ.நா எந்த அக்கறையும் காண்பிக்கவில்லை.

அண்மையில் சிறீலங்கா அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் பெருமளவான சிறுவர்கள் கலந்துகொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.