வீடுகளிலிருந்தே தீபாவளியைக் கொண்டாடுங்கள் -இரா.சம்பந்தன் வலியுறுத்தல்

கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா திடீர்ப் பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில், நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது எமது அனைவரது நல்வாழ்விற்கும் அவசியமாகும்.

எனவே, எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பிணிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழும் உறவுகள் ஆகியோரைக் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்தப் பண்டிகை தினத்தினை அவரவர் வீடுகளில் இருந்து மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்.

அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதையும், புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கச் செல்வதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் இவ்வருடம் தவிர்த்து, வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எதிர்நோக்கியுள்ள சுகாதாரச் சவாலினை முறியடிப்போம்”  என்று தெரிவித்துள்ளார்.