விரைந்து பௌத்த சிங்கள மயமாக்கப்படும் புல்மோட்டை

புல்மோட்டை எனும் சிறு நகரம் திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மையான தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இருக்கும் ஒரு நகரமாகும் இந்த நகரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது.

30 சதுர கிலோமீட்டர் பரப்பிலான யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த பகுதியில்
1. 10 பௌத்த விகாரைகள்
2. 2 சிங்கள குடியேற்றங்கள்
3. 4 நிரந்தர கடற்படை முகாம்கள்
4. 2 நிரந்தர ராணுவ முகாம்கள் உருவாக்க பட்டு இருக்கிறது..

2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிற்கு பின்னர் B 60 வீதி அடங்கலாக தமிழ் பேசும் மக்கள் வாழும் இவ் பகுதி எங்கும் சிங்கள குடியேற்றங்களின் விரிவாக்கம், நிரந்தர இராணுவ முகாம்கள் , பௌத்த விகாரைகள் எனபுல்மோட்டை பகுதியை சிங்களமயமாக்குவதற்கான ஒரு பரந்த முயற்சி இப்பகுதியில் உள்ள அரிசிமலை என்கிற இடத்தில தங்கி இருக்கும் Thilakawansa Nayaka எனும் புத்த பிக்குவின் ஏற்பாட்டில் நடை பெற்று வருகிறது.

இந்த பிக்கு தலைமையிலான குழுவினர் புல்மோட்டை , அரிசிமலை தென்னன்மரவாடி என குச்சவெளி பிரதேச செயலக பகுதிகளில் சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த விகாரைகளை தொடர்ச்சியாக நிறுவ முயற்சித்து வருகின்றனர் . அண்மையில் கோட்டாபய ராஜபக்சே நியமித்த கிழக்கு மாகாணத்திற்க்கான தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியிலும் இவர் ஒரு அங்கத்தவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக அரிசிமலை எனும் தமிழ் பேசும் மக்களின் மீனவ கிராமத்தில் பௌத்த வளாகம் ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் . அத்துடன் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் விகாரைக்கு Asiri Kanda Purana Rajamaha பெயரிட்டு இருப்பதோடு 500 ஏக்கர் நிலமும் விகாரைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதுமட்டுமல்லாது இப் பகுதியை சூழ எல்லா இடங்களிலும் புத்தர் சிலைகளையும் சிறிய கோவில்களையும் நிறுவி வருகிறார்கள். இதில் அரிசிமலை கடற்கரையின் தென்மேற்கே உள்ள காட்டு பகுதியில் கூட புத்த கோவில் ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் .

அங்கு புத்த பிக்குகளுக்கான தியான மண்டபங்கள் , வாழ்விடங்கள் உட்பட பல அமைக்கப்பட்டு இருக்கின்றன,. அத்துடன் இப்பகுதி எங்கும் புத்த துறவிகளுக்கானது என்றும் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.

அதே போல திருகோணமலையின் தென்னைமரவாடியில் இருந்து புல்மோட்டை செல்லும் வீதியில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இரண்டு தமிழ் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு(10 ஆம் கட்டை ) சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்க பட்டு இருக்கிறது .ஏற்கனவே சிங்கள குடியேற்ற வாசிகள் தற்காலிக குடியேற்றங்களை உருவாக்கி குடியேறி உள்ள நிலையில் பௌத்த பிக்குகளின் ஆதரவில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடன் வீடமைப்பு அதிகார சபையால் நிரந்தர வீடமைப்பு திட்டம் உருவாக்க பட்டு இருக்கிறது .

இந்த வீடமைப்பு திட்டத்திற்கு குச்சவெளி பிரதேச செயலகத்தின் எந்த வித அனுமதியும் பெறப்படவில்லை .காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியும் இதற்க்கு பெறப்படவில்லை . இவ் குடியேற்ற திட்டம் ஒன்றுக்கு சாந்தபுர என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

அத்துடன் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னன்மரவடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட தன் பிற்பாடு கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அப் பகுதியிலும் புத்தர் சிலைகள் , பௌத்த விகாரைகள் , தியான மண்டபங்கள் என பாரியளவிலான பௌத்த மயமாக்கல் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

நன்றி- இனமொன்றின் குரல்