‘விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள்

சே குவேரா…,பல பேர் இவர் யாருன்னே தெரியாம அவர் படம் போட்ட பனியனோடு சுத்துவதைக் காணமுடியும். சே வரலாறு என்பதைப் பார்ப்பதைவிட அவரது சொற்கள் துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்றவை என்பதைப் பார்க்க வேண்டும்.

சே -வின் குரல் – எல்லா மனிதருக்கும் மனிதம், அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைனன். நான் யாருக்கும் குறையாத லத்தீன் அமெரிக்க தேச பக்தன். இங்கே வந்திருக்கும் லத்தீன் அமெரிக்க முக்கிய மனிதர்கள் யாரும் தங்களை நான் அவமதித்து விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதாவது ஒன்றின் விடுதலைக்கு எந்த பலனும் கேட்காமல், யாரையும் பலி கேட்காமல் நான் என்னையே தருவதற்கு தயாராக இருக்கிறேன்.

ஏகாதிபத்தியத்தை நிர்மூலப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொன்றாக, சிறு சிறு கட்டமாக மக்களை விடுவிக்க வேண்டும். எதிரியை அவன் பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து கடுமையான போராட்டத்திற்கு அழைக்க வேண்டும். அவனுக்குச் சாதகமான பகுதிகளையும் முகாம்களையும் அழிக்க வேண்டும்.

தோழரே! பட்டவர்த்தனமாக சொல்வதென்றால் ஸ்பெயினின் எந்தப்பகுதியிலிருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என்பதை நான் அறியேன். நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தங்கள் பூர்வீக வீட்டை விட்டு பிறந்தமேனியோடு வெளியேறிவிட்டனர். வசதியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் அதுபோல கிளம்ப மாட்டேன். நாம் நெருங்கிய உறவினர்கள் இல்லை என நினைக்கிறேன். இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.

ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீ எனது தோழன். உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன்தான்.

புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும். மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல். நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்.

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம். விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை. எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நாணையத்தை சுண்டிப்போட்டு அதிர்ஷ்டத்தை நம்புவதைப் போல, அபாயத்தை எதிர்கொள்கிறான் போராளி. ஒரு கொரில்லாப் போராளிக்கு, ஒரு மோதலைத் தொடர்ந்து அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லாமல் போய்விடுகிறது

நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால், நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால், நமது இறுதிச்சடங்கில் இயந்திரத் துப்பாக்கியின் உறுமல்களோடும் புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்துகொள்வார்களேயானால் திடீரென ஆச்சரியப்படுத்தும் மரணத்தைக்கூட, நாம் வரவேற்கலாம்.

சமூக ஊடக பதிவிலிருந்து…