விக்கி, கஜன் வாய்களை நாடாளுமன்றத்தில் அடக்கியே தீருவோம்; விமல் வீரவன்ச ஆவேசம்

“யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தமிழீழக் கனவுடன் சபையில் உளறுகின் றார்கள். நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசுவது என்று தெரியாத அவர்களின் வாய்களை நாம் அடக்கியே தீருவோம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“மும்மொழியும் தெரியும் என்ற மமதையிலும், ஆங்கில மொழியில் அதிக தேர்ச்சி பெற்றவர்கள் என்ற தலைககனத்திலும், தமிழ் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்துவிட் டோம் என்ற திமிருடனும் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் வாய்க்கு வந்தமாதிரி பேசுகின்றார்கள்.

இனவாதத்தையும் மொழி வாதத்தையும் தூண்டும் வகையில் அவர்களின் உரைகள் அமைந்துள்ளன. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களையே அவர்கள் கூறுகின்றார்கள். தனி நாடு கோரும் வகையில் அவர்கள் உரையாற்றுகின்றார்கள். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் அமர்வுகள் இதுவரை இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன.

அந்த இரண்டு நாட்களுக்குள் விக்னேஸ்வரரினதும் கஜேந்திரகுமாரினதும் அலட்டல்களைத் தாங்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசுவது என்று தெரியாத அவர்களின் வாய்களை இனிவரும் நாட்களில் நாம் அடக்கியே தீருவோம்.

அதையும் மீறி அவர்கள் உளறினால் வைத்தால் கடந்த ஆட்சியில் புலி வேசம் போட்டு உறுமிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்ட நிலைமையையே எதிர்கொள்வார்கள். 16 உறுப்பினர்களுடன் கடந்த ஆட்சியில் நாடாளுமன்றத்துக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த ஆட்சியில் வெறும் 10 உறுப்பினர்களுடன் மட்டுமே சபைக்கு வந்துள்ளது.

கடந்த முறை தமிழ் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்து சண்டித்தனம் போட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இம்முறை தமிழ் மக்களே வாக்குகளினால் பாடம் புகட்டியுள்ளார்கள். அந்த நிலைமைதான் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோருக்கும் ஏற்படும் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கையாகச் சொல்லிவைக்க விரும்புகின்றோம்” என்றார்.