விகாராதிபதிக்கு ஆயுள் தண்டனை ; ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் ரீ-56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கொழும்பு – மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி ஊவாதென்னே சுமன தேரர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கடூழிய ஆயுள்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்தியா பட்டபெந்தி நேற்றைய தினம் இந்த தீர்ப்பை வழங்கியிருந்தார். ரீ-56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு மேலதிகமாக சுமத்தப்பட்ட 50 கைக்குண்டுகள் மற்றும் 210 துப்பாக்கி ரவைகள் வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவங்களிலிருந்து அவர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊவாதென்னே சுமன தேரருக்கு மீதான வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்ட அவரது உதவியாளரான மாவலதென்னே சுமேத தேரருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மித்த திகதியான 2010 ஜனவரி 20ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் ஸ்ரீ போதிராஜாராம விஹாரையிலிருந்து ரீ56 ரக துப்பாக்கிகள் இரண்டும், 50 கைக்குண்டுகளும், 210 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்ட நிலையில், குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு மீதான விசாரணைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.