
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார்விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் கட்சியின் மத்தியகுழு கரிசனையில் எடுக்கவேண்டும் என்று கோரி கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கூட்டத்திற்கு வருகைதரும் மத்தியகுழு உறுப்பினர்களை அந்த பதாகையினை வாசித்துவிட்டு செல்லுமாறு பொதுச்சபை உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பதாகையில் நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு,பொதுச்சபையை உடனடியாக கூட்டு,யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்தியகுழுவிற்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள், 2019 இல் பொதுச்சபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக்குழுவை இயங்கவிடு,மத்தியகுழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே என்ற விடயங்கள் எழுதப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மத்தியகுழு கூட்டத்தில் கட்சியின் தலைமை தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்று குழப்ப நிலை ஏற்ப்பட்டிருந்தது. அந்தவகையில் கட்சியின் தலைவரான மாவைசேனாதிராஜாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்ப்பதா அல்லது அவரே தொடர்ந்து தலைவராக செயற்ப்படுவதற்கு அனுமதிப்பதா என்பது தொடர்பாக இன்று வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழரசுக் கட்சின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன்,
“மத்திய குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தாலும் கூட முதலாவதாக தலைவர் விடயம் குறித்து பேசப்பட்டது. இதன்போது அடுத்த மாநாடு கூடுகின்ற வரைக்கும் இருக்கின்ற இடைக்காலத்தில் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் பணியாற்றுவார் எனவும், மாவை சேனாதிராஜா அரசியல் குழுத் தலைவராகச் செயற்பாடுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது மாவை சேனாதிராஜா ஒரு பெரும் தலைவராகவும் இருப்பார் என்றும் சொல்லப்பட்டது.
அரசியல் யாப்புக்களுக்கு அப்பாற்பட்ட பதவிகளில் இருப்பது அர்த்தமில்லை எனவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.” – என்றார்.



