வல்வெட்டித்துறையில் கைதான 4 இந்திய மீனவர்கள் விடுவிப்பு; படகு, வலைகள் பறிமுதல்

இயந்திரக்கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் படகில் கரையொதுங்கிய போது கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு மீனவர்களும்  பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், முன்னதாக அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம் வல்வெட்டித்துறை  காவல்துறையினரால் மீளப்பெறப்பட்டது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தமை, அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் இலங்கை நீரியல்வள திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டன.

மீனவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, தலா 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை என்ற நிபந்தனையில் அவர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் படகு மற்றும் வலைகளை பறிமுதல் செய்து, அரசுடைமையாக்குமாறு பருத்தித்துறை நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.