வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் : சர்வதேச மன்னிப்புச்சபை கருத்து

அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் இடைவெளி இருக்கின்றது. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பையும் கடப்பாட்டையும் கொண்டிருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

2023 ஆம் ஆண்டு நான் முதன்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டபோது பெரிதும் கவலையடைந்தேன். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரின் நீண்டகாலப் போராட்டத்துக்கு இன்னமும் பதில் கிட்டாத Nபுhதிலும், போராட்டம் இன்னமும் தொடர்கின்றது.

மாநாடு ‘நீதிக்கான நீள்பயணம்’ எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் தசாப்தகாலமாகப் போராடிவருகின்றனர். ‘எமது உறவுகள் எங்கே?’, ‘அதன் பொறுப்பாளிகள் யார்?’ என்பதே அவர்களது கேள்வி. இருப்பினும் இன்னமும் எந்தவொரு அரசாங்கமும் அதற்குப் பதிலளிக்கவில்லை. இது இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைக் காண்பிக்கின்றது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எங்கே என்ற உண்மையை வெளிப்படுத்தும் அதேவேளை, அதன் பொறுப்பாளிகள் யார் என்பதையும் வெளிப்படுத்தவேண்டும். இவை இரண்டும் இருவேறான விடயங்கள் அல்ல. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் சுமார் 587 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே மனிதப்புதைகுழி அகழ்வுடன் மாத்திரம் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது.

 

அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் இடைவெளி இருக்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. இவ்விடயத்தில் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பையும் கடப்பாட்டையும் கொண்டிருக்கின்றது.

 

அதேவேளை இவ்விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் வகிபாகம் இன்றியமையாததாகும். அதற்கு சமாந்தரமாக உள்ளகப் பொறிமுறைகளும், குற்றவியல் விசாரணைகளும், நீதிமன்ற செயன்முறைகளும் உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டும். நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படும் வரை சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.