அமெரிக்காவுக்கும்- சீனாவுக்கும் இடையில் இடம் பெறும் வர்த்தகப்போரில் யாரும் வெற்றியீட்ட முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த செவ்வாய்க்கிழமை(10) பீஜிங்கில் இடம்பெற்ற தொழிலதிபர்களுக் கான மாநாட்டில் பேசும்போது தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் உலக வங்கி, பிறிக்ஸ் அமைப்பின் புதிய அபிவிருத்தி வங்கி, அனைத்துலக நாணய நிதியம், ஐ.நாவின் உலக வர்த்தக நிறுவனம் ஆகிய முக்கிய அமைப்புக்களைச் சேர்ந்த பிரதி நிதிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பரந்த அளவிலான இணக்கப்பாடுகள், பேச்சுக்கள், மற்றும் முகாமைத்துவ உறவுகளை வொசிங்டனுடன் சீனா பேண விரும்பு கின்றது. அமெரிக்காவும் அதனையே எம்முடன் மேற்கொள்ளவேண்டும் என நாம் விரும்பு கின்றோம். வரி மோதல்கள், தொழில்நுட்ப போட்டிகள், பொருளாதார போர் என்பன வர்த்தக விதிகள் மற்றும் அதன் வரலாறுகளுக்கு எதிரான போர் ஆகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா தடுக்க நினைத்தால் அதுதான் இறுதியான எல்லைக்கோடு. அமெரிக்காவின் பொருளாதாரப் போருக்கு சீனா பதிலடி வழங்கத் தயங்காது என கடந்த மாதம் சீன அதிபர் அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.
இந்த மாதம் சீனாவுக்கு மென்கடத்திகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. அதற்கு பதிலடியாக மென் கடத்திகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை சீனா தடை செய்திருந்தது.