வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் – மட்டுநகர் திவா

அதிகாலை 4 மணிக்கு அம்மா போட்டு தந்த தேனீரை அருந்திவிட்டு நல்ல குளிர் தாங்கக் கூடிய சேட்டும், அந்த நேரம் கொறோனா என்றதால முகக்கவசமும் போட்டுகொண்டு பகத்து வீட்டு சக்தி அண்ணாவையும் அழைத்துக்கொண்டு மூதூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தேன்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை – நாவலடி சந்தி – வாகரை – செருவில தாண்டி திருகோணமலை பக்கம் வாருகிற நேரம் மூதூர்க்கு செல்ல முதல் நீலாபொல என்று ஒரு பெயர் பலகையோட ஒரு சந்தி வரும்.

முதல் பாரதி புரம் என்று தான் அந்த இடத்தில் பெயர் பலகை இருந்தது. அதை அகற்றிவிட்டு இப்ப கொஞ்ச நாளாக தான் நீலாபொல என்ற சிங்கள ஊர் பெயர் பலகையை வைத்தார்களாம். (ஊர் மக்கள் தெரிவித்தார்கள்)

நீலாபொல சந்தியில ஒரு உணவகம் உள்ளது செருவில கடந்து வருகிற நேரம் திறந்து இருந்தது அந்த கடை மட்டும் தான்.

அங்க தேனீர் அருந்தி 3 பரோட்டாவும் சாப்பிட்டோம், அப்போ அந்த நேரம் அதிகம் பசிக்கவில்லை அதிகாலை நேர பிரயாணம் என்றதால களைப்பும் இருக்கவில்லை எனினும் காட்டுக்குள்ள போன பிறகு பசி எடுத்தால் என்ன செய்வது என்று பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க நேரம் 7 மணியை அண்மித்துவிட்டது.

மேலதிகமாக 3 மரக்கறி ரொட்டியும் வாங்கி கொண்டு நீலாபொல வீதியால போய்க்கொண்டு இருந்தோம்.

வீதிக்கு அருகாக பெரிய வாய்காலும் அது நிறைய தண்ணீரும் நீண்ட தூரம் வரை எங்களுடன் வந்துகொண்டே இருந்தது.

Thirumankalai 11 வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் - மட்டுநகர் திவாஅப்போ சக்தி அண்ணா கூறினார் “இன்னும் 8 மணி கூட ஆகல்ல, காட்டு மிருகங்கள்ட நடமாட்டம் குறைந்திருக்காது, நாம எப்படியாச்சும் எட்டு மணி வரைக்கும் காத்திருக்கவேணும்.” என்று.

ஓம் அண்ணா எனக்கும் அதுதான் சிந்தனையாக இருக்கு என நான் கூறமுதல் நீங்களே கூறீட்டீங்கள்.

அங்கே என்னென்ன மிருகங்கள் இருக்கும்.. அவைகளிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று நிறைய பயம் கலந்த கதைகளை பேசிக்கொண்டே போய்க் கொண்டிருந்தோம்.

போகும்போது கங்குவேலி எனுமிடத்தில் 8 மணி வரை நேரத்தை செலவிட்டுவிட்டு லிங்கபுரம் காட்டு பகுதியின் எல்லையில் உள்ள அணைக்கட்டில் உந்துருளியில் பயணித்தவாறு காட்டுக்குள் இறங்குவதற்கு வழியை தேடிக்கொண்டே 2-3 கிலோமீட்டர்கள் பயணம் செய்தோம்.

காட்டுக்குள் செல்வதற்கென பிரதான வழிகள் ஏதும் இல்லை என்பதால் சரியான பாதையை கண்டுபிடிப்பதும் பின்னர் போன வழியால் திரும்பிவந்து ஊருக்குள் சேருவது என்பதும் மிகவும் கடினமான வேலை.

அணைக்கட்டிலிருந்து காட்டுக்குள் உந்துருளியை இறக்க முடியாதவாறு யானை வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இறுதியாக யானை வேலி முடிவடையும் இடத்தில் காட்டுக்குள் ஆட்கள் சென்று வந்த அடையாளங்களுடன் ஒரு வழிப் பகுதியைக் கண்டு பிடித்தோம்.

அதே வழியால் நாமும் சற்று தூரம் பயணிக்க கழுமரம் போன்ற அமைப்பில் கீழே பெரிய அளவான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட அமைப்பு ஒன்று எம்மை வரவேற்றது.

Thirumankalai 11 வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் - மட்டுநகர் திவாஅதை கண்டதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி காட்டுக்குள் இறங்கி விட்டோம் எனும் பயம் இருந்தாலும் சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் என நினைத்து மகிழ்ச்சியில் இருந்தோம்.

சில நாட்களுக்கு முன்னர் அந்த இடத்தில் ஏதோ சடங்கு நடைபெற்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். பூசைப் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

அந்த இடத்திலும் நின்று வணங்கி விட்டு சில புகைப்படங்களும் எடுத்துவிட்டு வாகனங்கள் சென்று வந்த பாதையிலேயே தொடர்ந்து பயணத்தை லிங்கபுரம் காடு நோக்கி பயணித்தோம்.

மண்ணில் உரலை வைத்து வைத்து எடுத்ததுபோல பாதச்சுவடுகள் தெரியத் தொடங்குகிறது. அவ்வளவாக பயப்படவில்லை எது நடந்தாலும் சமாளிப்போம் இனி பின்வாங்க முடியாது என்ற நிலையில் அடி பார்ப்பதற்காக சக்தி அண்ணா இறங்கி சென்றார்.

நானும் அவர் பின்னாலே உந்துருளியை மெதுமெதுவாக எடுத்துக்கொண்டு சென்றேன். நாம் செல்லும் பாதையில் இருந்து யானையின் பாதம் விலகிச் சென்று கொண்டே இருப்பதால் அந்த யானை தற்போது இந்த இடத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் சற்று வேகமாகவும் அவதானமாகவும் சென்று கொண்டிருந்தோம்.

அடி பார்க்க தெரியாதவன் காட்டு வழியில் பயணிக்க தகுதியற்றவன் என கூறுவார்கள். காட்டு மணலில் பதிந்து இருக்கும் கால் தடங்களை வைத்தே என்னென்ன இடர்கள் என்னென்ன மிருகங்களால் வரும் என முன்கூட்டியே நாம் கணிக்க வேண்டும்.

அப்போதுதான் தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும் சமாளிக்கும் சந்தர்ப்பம் நம்மிடம் இருக்கும்.

Thirumankalai 55 வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் - மட்டுநகர் திவாஅனேகமான மிருகங்கள் மனிதரைப் போன்று எடுத்தவுடன் தாக்காது. எப்படியும் நம்மிடமிருந்து விலகிச் செல்லவே எத்தனிக்கும் அவை அவ்வாறு விலகிச்செல்ல இடம் கொடுப்பதே நம்மால் செய்யக்கூடிய முதலாவது வேலை.

அப்படி விலகிச்செல்ல முடியாவிடில் அவை தற்காப்புக்காக நம்மை தாக்கி விட்டுச் செல்லவே எத்தனிக்கும் அதற்கு இடம் கொடுக்காமல் காட்டு மிருகங்களை கண்டதும் நாம் அவற்றிடமிருந்து விலகிச் செல்வதே புத்திசாலித்தனம்.

நாம் போகும் வழியில் மரை, குரங்கு, மயில், உடும்பு, முயல் போன்றவையும் கண்ணில்ப்பட்டது. அவற்றை நாம் தொந்தரவு செய்யவில்லை எனினும் எம்மைக் கண்டவுடன் சற்று மறைவான இடத்தில் அவை சென்றுவிட்டன.

காட்டுக்குள் ஒரு மணி நேர பயணத்தின் பின் திருமங்களாய் சிவன் கோவிலை வந்தடைந்தோம்.

மட்டக்களப்பில் இருந்து அண்ணளவாக 90 மைல் தொலைவிலும் கிளிவெட்டி பிரதேசத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த லிங்கபுரம் என்ற காட்டு பகுதி உள்ளது.

முன்பு இந்த இடம் திருமங்களாய் என அழைக்கப்பட்டது. தமிழர்கள் செறிவாய் வாழ்ந்த இந்த பகுதி, 1964 இன் பின்னர் உருவான கலவரங்களால் அடர்ந்த வன பகுதியாய் மாறி காடுகளாக மாறியது என அறிய முடிந்தது.

திருமங்களாய் சிவன் கோவில் ஓர் மிக புராதன சிவன் கோவில் தான் என முதல் பார்வையிலேயே அறிய முடிந்தது.

திருகோணமலை வரலாற்றை கூறும் திருக்கரசை புராணம் என்ற வரலாற்று நூலில் திருமங்களாய் பற்றி பல குறிப்புகள் உள்ளன.

“இடைபிங் கலைஇம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை கடவும் பாலைவனம் கைகண்ட மூலம் படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே”

Thirumankalai 33 வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் - மட்டுநகர் திவாஎன திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடும் தில்லைவனம் இந்த லிங்கபுரம் வணமாகவே இருக்க வேண்டும் என்பதும் ஒரு கதை. இது எவ்வளவு உண்மை என நிரூபிக்கும் அளவு அறிவு எனக்கில்லை. அறிந்தவற்றை ஒப்புவிக்கிறேன் அவ்வளவு தான். ஆர்வம் உள்ளவர்கள் ஆதாரத்தை தேடி எடுத்துக்கொள்ளலாம்.

கோவிலுக்கு வந்து சேர்ந்ததும் எல்லையற்ற மகிழ்ச்சி. இது கோவிலை கண்டதால் வந்த மகிழ்ச்சி என்பதை விட ஒரு விலங்கிடமும் நாம் மாட்டிக் கொள்ளவில்லை என்கின்ற மகிழ்ச்சி தான் எனலாம்.

வந்து இந்த இடத்தை பார்க்கும் போதே ஒரு வகை பயத்தையும் ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் என்னுள் உணர முடிந்தது.

ஏற்கனவே தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து முழுமையாக ஆராய்ச்சிகளை முடித்த இடம் என்பதால் அத்திவாரம் வெட்டிய குழிகள் போல இருந்த குழிகள் கண்ணில் பட்டது ஆச்சரியம் இல்லை. எனினும் அங்கு இருந்த பழைமை வியக்க வைத்தது.

கோவில் என சொல்லும் போது ஒரே ஒரு கட்டடம் தான் கட்டடம் போன்ற கட்டமைப்புடன் இருந்தது. மற்றவை எல்லாம் உடைந்து விட்டது.

 

புதிதாக யாரோ லிங்கம், நத்தி, பலிபீடம் என்பவற்றை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். அவை மட்டும் அங்கே புதியவை என முதல் பார்வையிலேயே அறியக்கூடியதாக இருந்தது.

சுற்று வட்டாரத்தில் நேர்த்தியான பொழியப்பட்ட தூண்கள் மற்றும் குழிக்கற்கள் எவ்வளவு பிரம்மாண்டமான கோயில் அவ்விடத்தில் இருந்திருக்கும் என்பதை சான்று பகிர்கின்றன.

முற்றுமுழுதாக கருங்கல்லால் செதுக்கப்பட்ட கோமுகி ஒன்றினையும் என்னால் அங்கு அவதானிக்க முடிந்தது.

சோழர் காலத்து சிவன் கோயில் என்பதால் அவர்களது கட்டடக்கலையில் கோமுகிக்கு கொடுக்கும் இடம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை இது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

கோவிலின் முன்னால் சதுரவடிவ சுரங்கம் ஒன்றும் உள்ளது. எங்கு சென்று முடிகிறது என தெரியவில்லை. ஆனால் நிலத்துக்குக் கீழே வளைந்து செல்கிறது அதனுள் புற்கள் வளர்ந்துள்ளதால் மேலிருந்து கீழே என்ன இருக்கிறது என பார்க்க முடியவில்லை. எனினும் திருகோணமலை வரை சுரங்கம் செல்வதாக கதையொன்று உள்ளது இதற்கும் சான்றுகள் என்னிடம் இல்லை.

அண்மைய ஆய்வுகளில் இங்கு இங்கு 5 மிக பழமையான கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 3 கல்வெட்டுகள் கி.பி 10, 11 நூற்றாண்டுக்கு உரியவையும் ,மீதி ரெண்டு 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் கருதப்படுகிறது.

சுற்றவர முழுமையாகப் பார்த்துவிட்டு காட்டில் கிடைத்த பூக்களை வைத்து சிவலிங்கத்தை வணங்கி விட்டு ஒரு மணிநேரத்தின் பின் மீண்டும் நீலாப்பொல கிராமம் நோக்கி வந்த வழியே பயணத்தை தொடர்ந்தோம்.

அடுத்த பயணத்தில் சந்திப்போம்…