வரணி விவகாரத்தை அடுத்து சைவத்திருக் கோவில்களுக்கான பொது ஒழுக்கக் கோவை தயாரிப்பு

வரணி விவகாரத்தை அடுத்து நல்லை, தென் கைலை ஆதீனங்களின் அருள் வழிகாட்டலுடன் சைவத்திருக் கோவில்களுக்கான பொது ஒழுக்கக் கோவை, யாப்பு , நடைமுறைகள் என்பன தொடர்பாக ஆராய நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது. ஆதீனங்களும், முக்கிய அகில இலங்கை ரீதியான சைவ அமைப்புக்களும் இணைந்து இம் முடிவை மேற்கொண்டுள்ளன.

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வுகள் போன்று நடைபெறாது தடுத்தல்,

ஆலயங்களை பொருள் பொதிந்த சமூக மையங்களாக மாற்றியமைத்தல்,

ஆலயத்தை ஆதரிக்கும் ஏழை மக்களிற்கு ஆலய வருமானத்தின் ஓர் பகுதி பயன்படும் வகையில் அறப்பணி நிதியத்தை தாபித்தல்,

ஆலய தொன்மம் பாதுகாத்தல், வெளிப்படைத் தன்மையான சனநாயக ரீதியிலான தவணை அடிப்படையிலான நிர்வாகத் தெரிவு,

சமய, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தான்தோன்றினமான தனிநபர் முடிவுகளை கட்டுப்படுத்தல்,

கூட்டு வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தல், ஆலயத்தினால் கேளிக்கைகள் வீண் ஆடம்பரங்கள் நிகழ்த்தப்படுவதை கட்டுப்படுத்தல்,

ஆலயச் சூழலின் புனிதத்தை பாதுகாத்தல்

போன்ற முக்கியமான விடயங்களில் நிபுணர்கள் ஒழுக்க கோவை தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கவுள்ளனர்.

2020 தைப்பூசத்திற்கு முன்னதாக நிபுணர் குழுவின் பரிந்துரைகள் ஆதீனங்கள், அகில இலங்கை ரீதியான சைவ அமைப்புக்கள் உள்ளிட்ட சமய உயர் பீடங்களிடமும் இந்துக் கலாச்சார அமைச்சு, மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு உள்ளிட்ட அரச உயர் பீடங்களிடமும் கையளிக்கப்படும்.

2019 மார்கழிற்கு முன்னதாக நிபுணர் குழுவிடம் நேரிலோ தபால், மின்னஞ்சல் மூலமாகவோ சைவ சமயிகள் தங்கள் பரிந்துரைகளையோ சாட்சியங்களையோ வழங்கலாம்.

வெகு விரைவில் நிபுணர் குழு விபரம், தொடர்பு முகவரி, இலக்கங்கள் அறிவிக்கப்படும். உங்களுடைய ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.