வட, கிழக்கு- மலையக அபிவிருத்தியில் கூடிய கவனம் – இந்திய வெளியுறவு அமைச்சர் கூறுகிறார்

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா பற்றுறுதி கொண்ட பங்காளியாகத் தொடர்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளில் அதிகூடிய கவனத்தைச் செலுத்துவதற்கு எண்ணியுள்ளதாவும் அவர் ஊடகமொன்றுக்கு வழங்கியநேர்காணலில் குறிப்பிட்டார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியவை வருமாறு:

“இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வசிக்கும் குடும்பங்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்தியாவின் பிரத்தியேக வீடமைப்புத் திட்டம் இலங்கைத் தீவின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், வடக்கில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் மற்றும் ஹற்றன் டிக்கோயாவில் மருத்துவமனை ஆகியவை இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கடன் திட்டத்தின் மூலம் வடக்கு மாகாணத்துக்கான ரயில் பாதைகள் அமைத்து முடிக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் ஆகியவற்றை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் இந்திய நிதியைக்கொண்டு நடைபெற்றுவருகின்றன. அத்துடன் மலையகத்திற்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மேலதிகமாக அறிவிக்கப்பட்டுள்ள 10ஆயிரம் வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் அடுத்த நான்கு ஆண்டுகளில் பூர்த்தியாகவுள்ளன.

பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்பு, அம்புலன்ஸ் சேவைகள், பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கல்வியை மேம்படுத்துதல் போன்ற எமது கடந்த கால கருத்திட்டங்களிலிருந்து பெற்றுக் கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் முழு இலங்கையிலும் கொரோனாவிற்குப் பின்னரான பிராந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சமூகத்தையும் மனித வளங்களையும் கட்டியெழுப்புவதற்காக நாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவோம்.

அதனைக் கருத்திற்கொண்டு, எங்கள்வளர்ச்சி கூட்டாண்மைக்கான எதிர்கால செயற்றிட்டம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டேன். உள்நாட்டு தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் ஆராய்ந்து எமது உரையாடல்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

நாம் கல்வி, திறன் விருத்தி, தொழில் பயிற்சி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் எமது அதிகூடிய கவனத்தைச் செலுத்துவதற்கு எண்ணியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.