வடமாகாண கல்வியை சிதைக்க ஆளுநர் முயல்வதாக குற்றச்சாட்டு

யாழ். மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு வடமாகாண ஆளுநர் உடந்தையாக இருக்கிறார் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்ற நிலையில் அது தொடர்பில் நீதிமன்றங்களிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

அண்மையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இடைக்கால தடையையும் விதித்தது.

அவ்வாறான நிலையில் தற்போது மேன்முறையீட்டை பரிசீலிக்கிறோம் என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை ஆசிரியர்களுக்கு வழங்குவது ஏற்க முடியாது” என்றும் அவர் சாடினார்.