வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கைகளை புதிய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்: சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல்

நடக்க இருக்கின்ற பொதுத்தேர்தல் ஆனது, பாராளுமன்றுக்கு உறுப்பி னர்களை அனுப்பு கின்ற ஒரு தேர்தல். அது வருகின்ற நவம்பர் மாதம் 14ம் திகதி நடக்கவுள்ளது.  இதற்கான  அனைத்தும் ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்கின்றது.  மக்கள் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலைக் குறித்துதான் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

ஜனாதிபதித்தேர்தல் நிறையப்பேர் எதிர்பார்த்ததுக்கு மாறாக ஒரு புதிய அணியைச் சேர்ந்தவரை மக்கள் தெரிவு செய்து இருக் கின்றார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி, நிறைய புதிய விடயங்களை கொண்டு வந்துள்ளார். சில புதிய விடயங்களையும் செயற்பாட்டில் கொண்டு வந்துள்ளார்.மக்களுக் கும் பிடித்தமானவற்றை செய்து வருகின்றார்.

அத்துடன் எதிர்த்தரப்பும் சில பிழைகளை விட்டுள்ளனர். அதாவது  கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள் எனக்கருதி ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தாது விட்டனர். அதாவது கொள்கை ரீதியாக ஊழல், மோசடிகள், அரசியல்வாதிகள் அதிகாரத்தில் உள்ளவர்கள்  செய்த  மோசடிகள் குறித்து மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்பில்  தங்களுடைய பிரசாரத்தைக் கொண்டு சென்றனர். இதனால்தான் மக்கள் அவர்களை ஒதுக்கிவிட்டு புதிய ஒருவரை ஜனாதிபதியாக கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஜனாதிபதி அவரைச் சேர்ந்த கட்சியினர், பாராளுமன்ற தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தால்தான் அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியும்.  ஆனால் அந்த பெரும்பான்மையை எப்படி அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், இந்த கட்சி ஊழலை ஒழிப்பதற்கு , ஊழல் செய்தவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதும் அத்தோடு பெருமளவில் மோசடி செய்த, பணம் மற்றும் சொத்துக்களை மீள் எடுப்பதற்கான நடவடிக்கையை இந்த புதிய ஜனாதிபதி செய்ய வேண்டும். மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒரு வெளிப்பாட்டுத் தன்மையுடன் அதன் உண்மைகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவது  போன்ற  பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகளைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் மக்களிடையே இருக்கின்றது.  எனவே  இப்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், மக்களின் எதிர்பார்ப் புக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால்தான் மக்கள் மீண்டும் அவர்களை நம்பி இந்த தேர்தலிலும் வாக்களிப்பார்கள். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் முதன்மையான ஏனைய இரு வேட்பாளர்களும் முற்றாக மக்களால் தோற்கடிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த காலங்களில் மக்களின் நலன்களில் எந்த அக்கரையும் இல்லாமல் அதிகாரத்தைப் பயன் படுத்தி நலன்களை அனுபவித்துக்கொண்டு வந்த மூத்த அரசியல் வாதிகள் யாரும் இந்த பொதுத் தேர்தலில் பங்கு பெறவில்லை என்பது ஒரு நல்ல செய்தி. அவர்கள் மீதுள்ள மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர்கள் விலகிக்கொண்டார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

நாடு முழுவது மேற்குறிப்பிட்ட காரணங் கள் இருக்க, வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு இங்கு முக்கியமாக நோக்க வேண்டி யுள்ளது.  அதில் முக்கியமாக   காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கான நீதி, அவர்களுக்கு என்ன நடந்தது? கையளிக்கப்பட்டவர்கள் காணாமல்  ஆக்கப்பட்டமைக்கு காரணமானவர்களை சட்டத் தின் முன் நிறுத்துதல் போன்ற பல பிரச்சனைக்கான தீர்வுகளை அந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அந்த மக்களின் கோரிக்கைகளை புதிய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் ஏனெனில், கடந்த பல வருடங்களாக வடக்கு கிழக்கு மக்கள் போராடுவது மேற்குறிப்பிட்ட பிரச்சினைக்கு உண்மையைக்கண்டறிந்து அதற்கு பொறுப்புக் கூறுதல். அதைத்தான் அந்த மக்கள் விரும்புகின்றனர். அத்தோடு நம்பகரனமான பொறிமுறையின் மூலம் இவற்றை செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த புதிய அரசாங்கம் இந்த பொதுத்தேர்தலை சந்திப்பது அவர்களுக்கு நல்லது. அதே சமயத்தில் இப்போதுள்ள நிலையை பார்த்தால் தமிழ் தேசிய வாதிகளின் பிடி கொஞ்சம் நீர்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழரசு கட்சி உடைந்து விட்டது.

அதைத்தொடர்ந்து வேறுபல உதிரிக் கட்சிகள், தேர்தலில் நிக்கின்றன. ஆகவே இம்முறை வடக்கு கிழக்கு மக்களுக்கு ஒரு நெருக்கடியான நிலைதான் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாதுகாத்து வரப்பட்ட தேசியம் என்பது  இந்த முறை மிகப் பெரியதொரு பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலை பொதுத்தேர்தலி லும் பிரதிபலிக்கும் என்பது என் கருத்து.