லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்: 52 பேர் பலி

வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலின் தொடர்ச்சியாக இந்த கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இதனிடையே, மத்திய காசாவில் வியாழக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த 25 பேரின் உடல்களை பாலஸ்தீனியர்கள் மீட்டெடுத்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு பெய்ரூட்டில் புறநகர் பகுதியான தஹியேக்கில் பல்வேறு கட்டிடங்களின் மீதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஹிஸ்புல்லா  குழுவுக்கு எதிரான தனது தாக்குதலை இஸ்ரேல் லெபனான் எல்லைப்புறத்தையும் தாண்டி விரிவாக்கம் செய்து வருகிறது. அதேநேரத்தில் வடக்கு காசாவில் ஹமாஸ்களுக்கு எதிராகவும் ஒரு நீண்ட போரினை இஸ்ரேல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.