லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 450 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்று அதே பாணியில் வாக்கி-டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்கி-டாக்கிகள் அனைத்துமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தியது எனக் கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா கொள்வனவு செய்திருந்த, தைவானில் தயாராகும் 5 ஆயிரம் பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்திருந்ததாக லெபனானி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் லெபனானில் மருத்துவமனைகள் காயமடைந்தவளால் நிரம்பியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பார்வையிழந்துள்ளனர், வேறு சிலர் உறுப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.