ரிஷாத் பதியுதீன் கைது -மனோ கணேசன் கண்டனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைதுக்கு எதிராக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்  கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவில்,

“நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ஆவேசம் என்ன? ராஜபக்ச அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகின்றதா?” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,“ரிஷாட் பதியுதீன் அவர்கள் சீஐடி யினரால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது. சபாநாயகருக்கு அறிவிக்கப் படாமல் நீதிமன்ற பிடியாணை எதுவுமில்லாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமாக நாட்டின் பொறுப்புவாய்ந்த பாதுகாப்பு துறை நடந்து கொள்வது இந்த துறைகள் தேசிய நலனில் அக்கறையின்றி ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாக  இயங்கும் இயந்திரமாகியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது” என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.