ராஜிதவின் செயலாளர் வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்? பொலிஸாரால் வீடு சோதனை

ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது அவரது ஊடகச் செயலாளராகக் கடமையாற்றிய எம்.ஐ.ஜே. மலித் விஜேநாயக்க நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அவரைக் கைதுசெய்வதற்காக பிடியாணை பெற்றுக்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரிகள் குழு கடந்த 14ஆம் திகதி அவரைக் கைது செய்ய அவரது வீட்டை முற்றுகையிட்டபோது அவர் வீட்டில் இருக்கவில்லை.

பொலிஸ் அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வீட்டை சோதனையிட்டுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளுக்காக விஜேநாயக்கவின் மடிக் கணனி மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதன்பின்னர் பொலிஸார் பல முறை விஜேநாயக்கவின் வீட் டைச் சோதனையிட்டுள்ளமையுடன் அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடத்தப்பட்ட – சர்ச்சைக்குரிய வெள்ளை வான் சம்பந்தமான – ஊடக சந்திப்பு மற்றும் அது தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சாரதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தவே மலித் விஜேநாயக்கவைக் கைதுசெய்யக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பிடியாணை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பில் அண்மையில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டார் எனக் கூறப்படும் சுவிற்ஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி சம்பந்தமான விடயங்களை வெளியிட்டு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நடத்திய செய்தியாளர் சந்திப்பு சம்பந்தமான மேலதிக தகவல்களைக் கண்டறிவதற்காக பொலிஸார் மலித் விஜேநாயக்கவைத் தேடிவருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

மலித் விஜேநாயக்கவிடம் இருந்து பல முக்கிய தகவல்களை வெளிக்கொண்டு வர முடியும் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே அவர் தப்பிச் சென்றுள்ள நாட்டைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மலித் விஜேநாயக்க, ராஜித சேனாரத்னவுக்கு எதிரான முக்கிய சாட்சி என்பதால், அவரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் எனப் பொலிஸாருக்கு மேல் மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது எனப் பேசப்படுகின்றது.