யு.எஸ்.எய்ட்டின் உதவிகள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள அரசாங்கம்

யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் உதவிகள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அது தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்திடம் அரசாங்கம் அறிக்கை கோரியுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
‘யு.எஸ்.எய்ட்டின் நிதியுதவிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கு குறித்து முழுமையாக ஆராயப்படுகிறது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் யு.எஸ்.எய்ட் ஊடாக வழங்கப்படும் உதவிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்தது.

இந்தநிலையில் யு.எஸ்.எய்ட் தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ‘அந்த அமைப்பின் ஊடாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையிலேயே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்துக்கு நேற்று சென்றிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சானக்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர், ‘அமெரிக்க – இலங்கை கூட்டாண்மையானது நீண்ட கால நம்பிக்கை, மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது’ என்று தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் நலன்களை முன்னேற்றுவது தொடர்பிலும், வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலம் தொடர்பிலும் தங்களது தரப்பு கவனம் செலுத்தும்’ என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ‘யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் இலங்கையில் பணத்தை எவ்வாறு செலவிட்டது என்பதை விசாரிக்க ஒரு தெரிவுக்குழு நியமிக்கப்படும்’ என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவும் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.