யாழ். சிறை முன்பாக சட்டவிரோத சிலைகள்: போராடத் தயாராகும் இளைஞர்கள்

யாழ்ப்பாணம், பண்ணை கடற்கரையோரமாக புதிய சிறைச்சாலைக் கட்டடத்துக்கு முன்பாக வீதி அதிகார சபைக்குரிய இடத்தை ஆக்கிரமித்து விஜயன் – குவேனி சிலைகளை சட்டவிரோதமான முறையில் அவசர அவசரமாக அவற்றைத் திறந்து வரலாற்றுத் திரிப்பையும் திணிக்க யாழ். சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரியவருகின்றது.

நேற்றுக் கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டு, சீலையால் மூடிக் கட்டப்பட்டிருக்கும் இச்சிலைகள் பெரும்பாலும் இன்று திறந்து வைக்கப்படவிருக்கின்றன என அறியவந்தது. இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிரான போராட்டம் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிகின்றது.

யாழ்.மாநகரச சபைக்கு உட்பட்ட, யாழ்.பண்ணைக் கடற்கரைக்கு அருகில், யாழ்ப்பாணம் புதிய சிறைச்சாலை வளாகம் அமைந்துள்ளது. இங்கு கொண்டுவந்து இறக்கப்பட்டிருக்கும் சிலைகள் துணியால் மூடிக்கட்டியிருப்பதால் அவற்றைப் பார்வையிட முடியாது என முதல்வருக்கும் மாநகரசபை உறுப்பினருக்கும் அங்கு பதிலளிக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

இந்த அத்து மீறல் நடவடிக்கைக்கு எதிராக – அந்தச் சிலைகள் இன்று திறந்து வைக்கப் பட முன்னரே – பொதுமக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இன்று காலை அங்கு அமைதியான கவனவீர்ப்புப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சில தரப்புகள் முயன்று வருகின்றன என தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.