யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கான விமான பயணத்திற்கு பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரியாக பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் ஊடக பிரிவு அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு செல்லும் பயணிகளுக்கான கட்டணங்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை காட்டிலும் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் விடுத்த கோரிக்கைக்கு அமைய வரிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையக் கட்டணம் சாதாரணமாக 6000 ரூபாயாக உள்ள நிலையில் யாழில் அதனைவிட இரண்டு மடங்கு அறவிடப்படுகிறது.

அத்துடன் கொழும்பு – சென்னை விமானக் கட்டணம் 22000 ரூபாயாக உள்ள நிலையில், யாழ். – சென்னை விமானக் கட்டணம் 28000 ரூபாயாக அறவிடப்படுகிறது.

கொழும்பு – சென்னை பயணத்தின்போது பயணி ஒருவர் 30 கிலோகிராம் பொதியை கொண்டு செல்லமுடியும்.

எனினும் பலாலி – சென்னை பயணத்தின்போது பயணி ஒருவர் 15 கிலோகிராம் பொதியை மாத்திரமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த பிரச்சினைகளை ஆராய்ந்து ஒரு மாதத்துக்குள் தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.