யாழ்ப்பாணத்தில் நான்கு இளைஞர்கள் கைது!

இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை அடுத்து யாழ். வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு குறித்த பகுதியில் இராணுவ வாகனத்துக்கு வழி விடவில்லை என கூறி இளைஞர்கள் சிலருடன் இராணுவத்தினர் முரண்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்புக்குள்ளும் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், உடனடியாக சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக பருத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் குறித்த பகுதியை இராணுவம் முற்றுகையிட்டு தொடர் சோதனை நடாத்திவருவதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள்- இராணுவம் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு இன்று காலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இராணுவச் சிப்பாயை தாக்கியவரை பிடிப்பதற்கான முயற்சியில் படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

முதலாம் இணைப்பு

யாழ். – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் தைப்பொங்கல் தினமான நேற்று பிற்பகல் இராணுவச் சிப்பாய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமியை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை குறித்த இராணுவச் சிப்பாய் கண்டித்துள்ளார். இதன்போது அந்நபரின் உறவினர்கள் அங்கு கூடி இராணுவச் சிப்பாயுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொண்டரை கைது செய்யும் நோக்குடன் அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

நாகர்கோவில் பகுதியிலிருந்து எவரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து எவரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரில் பிரதான சந்தேகநபரை தொடர்ந்தும் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிரதான சந்தேகநபரை கைது செய்யும் நோக்குடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.