யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல் அகழ்ந்தெடுக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பப்படுகிறது – சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றாா் யாழ். – கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறீதரன்.

“அவ்வாறு அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது” என்றும் தெரிவித்த சிறீதரன், “இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது? இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான் பொறுப்பு கூறுவது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளாா்.

“12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில் கற்களை கொண்டு செல்கிறார்கள். நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? என்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் சீறிதரன் கேள்வி எழுப்பினாா்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.