யாழில் கால் பதிக்கும் சீனாவின் முயற்சியை தடுக்குமா இந்தியா? – அகிலன்

முதலீடுகள் என்ற போர்வையில் இலங்கையின் வடக்கில் கால் பதிக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்தில் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ள புதுடில்லி, வடக்கில் இவ்வாறு சீனா கால்பதிப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தமக்குக் கிடைக்கும் என இறுதிக் கணம் வரையில் எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடைந்த இந்தியாவுக்கு, கடந்த வாரத்தில் மற்றொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது கோட்டாபய அரசு. யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்க வழங்கவுள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.

இதற்குத்தான் இந்தியத் தரப்பு இப்போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து சில மைல் தொலைவிலேயே இந்தத் தீவுகள் அமைந்திருக்கின்றன.

யாழ். தீவுகளில் சீனா கால் பதிப்பது இந்து சமூத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு சவாலான ஒன்று. இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையிலேயே இதனைச் செய்வதாக இந்தியா கருதுகின்றது.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய தீவுகளில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தியைக் கொண்ட மீன்திட்டங்களைத் தான் சீனா செயற்படுத்தப்போகின்றது. இதற்காக இந்தியாவும் விண்ணப்பித்திருந்த போதிலும், சீனாவின் திட்டமே கவர்ச்சிகரமானதாக இருந்ததாகக் கூறியே அந்தநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு இத்திட்டத்தைக் கொடுப்தென இலங்கை அரசு முடிவெடுத்தது. இந்தத் திட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ள சினோசர் இடெக்வின் நிறுவனம் சீன அரசின் ஒரு பினாமி நிறுவனம் எனக் கூறப்படுகின்றது.

கிழக்கு முனையம்

134 large 9381f34060655e8e360c664352a89291 யாழில் கால் பதிக்கும் சீனாவின் முயற்சியை தடுக்குமா இந்தியா? - அகிலன்

கிழக்கு முனைய விவகாரத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டதாக சீற்றத்தில் உள்ள இந்தியா, தீவுகள் விவகாரத்தால் பெரும் குழப்பத்துக்குள்ளாகியிருப்பதாகத் தெரிகின்றது. கிழக்கு முனைய விவகாரத்தைப் பொறுத்தவரையில் அதில் மூன்று நாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன. இலங்கை, இந்தியா, ஜப்பான் என்பனவே அவை. இந்த மூன்று நாடுகளும் கைச்சாத்திட்டிருப்பதால், அது ஒரு சர்வதேச உடன்படிக்கை. இதனைத் தான் மீறப்போவதில்லை என இறுதிவரையில் தெரிவித்துவந்த ஜனாதிபதி கோட்டாபய இறுதியில் கைகளை விரித்துவிட்டார்.

துறைமுக ஊழியர்களின் போராட்டத்தின் முன்பாக தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது இதனை நியாயப்படுத்துவதற்காக கோட்டாபய சொல்லிக்கொண்ட காரணம்.

இந்த சமாதானம் இந்தியாவைச் சாந்தப்படுத்தாது என்பது ஒருபுறம். உள்ளூர் அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு சக்தியாக சீனா வந்துவிட்டது என்ற அபாயச் சங்கு இதன் மூலம் ஊதப்பட்டுள்ளது. இந்தியாவைக் குழப்பும் விவகாரம் அதுதான். தொழிற்சங்கப் போராட்டங்களின் பின்னணியில் சீனா இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு எழுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தும் கிழக்கு முனையத்தைக் கைப்பற்ற முடியாமல் போனமை இந்திய இராஜதந்திரத்துக்கு ஒரு படுதோல்வி என்றே பார்க்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியில்தான் 3 தீவுகளில் மின்னசக்தித் திட்டத்துக்கான அனுமதியை சீனாவுக்குக் கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. பொருளாதார இராஜதந்திரம் என்னும் அடிப்படையிலேயே இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால்  இந்தியாவுடனான திட்டங்களின் போது, பொருளாதார இராஜதந்திரம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகின்றது என்பதுதான் புதுடில்லியின் கவலை.

ஜெனீவாவில் இந்தியா

ஜெனீவாவில் இலங்கை எதிர்கொள்ளப்போகும் நெருக்கடியைக் காட்டித்தான் தனக்குத் தேவையானவைகளைப் பெற்றுக்கொள்ள இந்தியா வியூகம் வகுத்திருந்தது. ஜெனீவாவில் இம்முறை நெருக்கடி தீவிரமாக இருக்கும் என்பதைத் தெரிந்திருந்தும், இந்தியாவின் பக்கம் சாய்வதற்குத் தாம் தயாராகவில்லை என்பதைத்தான் கொழும்பு உணர்திக்கொண்டிருக்கின்றது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு தீர்மானத்தையும் கொண்டுவந்து நிறைவேற்ற உறுப்பு நாடுகளாக உள்ள 47 நாடுகளில் 24 நாடுகளின் ஆதரவு தேவை. இந்தியா மறைமுக அச்சுறுத்தல்களை விடுத்தாலும், நேரடியாக களத்தில் இறங்காது என கொழும்பு நம்புகின்றது. இலங்கையில் இந்தியாவின் நலன்கள் அதிகளவுக்கு இருப்பது இதற்கு ஒரு காரணம். இந்திய அழுத்தங்கள் அதிகரித்தால், இலங்கை மேலும் அதிகளவுக்கு சீனாவின் பக்கம் சென்றுவிடும் என்ற அச்சம் இரண்டாவது காரணம்.

மனித உரிமைகள் பேரவையில் முஸ்லிம் நாடுகள் அதிகளவுக்குள்ளன. அவற்றின் ஆதரவைத் தக்கவைப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எதிர்வரும் 22 ஆம் திகதியே இம்ரான் கான் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். அவர் மூலமாகவும் தமது இந்த நிலைப்பாட்டை உறுதிசெய்வது கொழும்பின் திட்டம்.

இந்தியாவின் தரப்பிலுள்ள பலவீனங்கள் கொழும்புக்குத் தெரியும். அதன் அடிப்படையில்தான் கொழும்பின் காய்நகர்த்தல்கள் உள்ளன. இந்தியாவை உசுப்பேத்திவிடுவதற்கு தமிழ்க் கட்சிகள் முயன்றாலும், இந்தியாவின் நகர்வுகள் நிதானமாகவே இருக்கும். கொழும்பைப் பகைக்காமல், எதனையாவது சாதிக்க நினைத்து மேலும் பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்வது இந்தியாவுக்கு “வழமைபோல” தவிர்க்க முடியாததாகவே இருக்கப்போகின்றது.

இந்தியாவுக்கு எச்சரிக்கை

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் இது தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. இவர் சொல்லியிருப்பது இதுதான்;

“யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை இலங்கை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்க வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகவும் பாரதூரமான ஒரு விடயம்.  இனியாவது இலங்கைத் தீவில் நிரந்தர நம்பிக்கைக்குரிய தரப்பாக இந்தியா தமிழ் மக்களைக் கருதி அவர்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் அவர்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை மையப்படுத்தி தனது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்யவேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றினை தமிழ் மக்களே தெரிவுசெய்யும் வகையில் சர்வதேச சமூகத்தினால் வடக்கு கிழக்கில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கையை இந்தியா தலைமை ஏற்று நடத்த முன்வர வேண்டும். கிழக்குமுனை விடயத்தில் நடந்ததே நாளை 13ஆவது அரசியல் திருத்த விடயத்திலும் நடக்கும். ஒற்றை ஆட்சியின் கீழான எந்தத் தீர்வுக்கும் இந்த நிலைமையே ஏற்படும் என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும்.”

 

Capture 1 2 யாழில் கால் பதிக்கும் சீனாவின் முயற்சியை தடுக்குமா இந்தியா? - அகிலன்

விக்னேஸ்வரனின் கருத்து முக்கியமானதுதான். ஆனால், இதற்காக இந்தியா என்ன செய்யப்போகின்றது. தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இந்தியாவிடம் இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன உபாயம் இருக்கின்றது?

யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளை சீனாவுக்குக் கொடுக்கும் முடிவு நிச்சயமாக இந்தியாவைக் குழப்பியிருக்கின்றது. தமிழகத்திலிருந்தும் இதற்கு எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. காற்றாலை அமைப்பது என்ற பெயரில் கால்பதிக்கும் சீனா, அதனுடன் நின்றுவிடாது என்பது இந்தியாவுக்குத் தெரியும். தீவுப் பகுதிகளில் நிலைகொண்டால், இந்தியாவின் தென்கோடியை கண்காணிக்க முடியும். அதேவேளையில், தீவுகளில் உள்ள மக்களுடைய சூற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் இது காரணமாக அமையலாம்.

இந்த நிலையில் இலங்கையைப் பணிய வைக்க இந்தியாவுக்கு இன்றுள்ள ஒரே வாய்ப்பு ஜெனீவாதான். ஜெனீவாவில் இலங்கைக்கான நெருக்கடிகளும் இன்று தீவிரமாகவே உள்ளது. இந்த நிலையில், இந்தியா ஜெனீவாவை எப்படிப் பயன்படுத்தப்போகின்றது?