மொறோக்கோவில் இடம்பெற்ற பூமி அதிர்வினால் 1000 இற்கு மேற்பட்டவர்கள் பலி

வெள்ளிக்கிழமை (8) இரவு மொறோக்கோவின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற பூமி அதிர்வினால் அங்கு 1000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.

6.8 புள்ளியளவில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்வு மலைப்பகுதியை தாக்கியுள்ளது. பல பகுதிகளில் அழிவுகள் ஏற்பட்டதுடன், பொருமளவான உடமைகளும் சேதமடைந்துள்ளன. அங்கு தங்கியிருந்த சுற்றுலாப்பயணிகள் அச்சத்துடன் பாதுகாப்பு தேடி ஓடியுள்ளனர்.

வடஆபிரிக்க கண்டத்தில் இடம்பெற்ற மிக மோசமான பூமி அதிர்வு இதுவாகும். கடந்த 120 வருடங்களில் இடம்பெற்ற மிக மோசமான அழிவு இது என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு 1,037 பேர் கொல்லப்பட்டதுடன், 1204 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 721 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.