மைக் பொம்பியோவுக்கு பகிரங்க கோரிக்கை?

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை வருகையினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்களின் சங்கப்பிரதிநிதிகளால், இன்று யாழ் ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நிகழ்த்தப்பட்டது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத் தலைவி திருமதி யோகராசா கனகரஞ்சனி, யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க இணைப்பாளர் இளங்கோதை மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊடக சந்திப்பானது ‘அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுக்கு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் சார்பான செய்தியினை தெரிவிப்பதை நோக்கமாக கொண்டதென திருமதி யோ.கனகரஞ்சனி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தைச் சேர்ந்த நாம், தங்களின் இலங்கைக்கான வருகையினை வரவேற்பதுடன், தங்களை சந்திப்பதற்கும் ஆவலாக இருந்தோம். ஆயினும் தற்போதைய அரசியல் மற்றும் கோவிட் 19 சூழல் காரணமாக அம்முயற்சி கைகூடவில்லையாயினும் தங்களது மேலான கவனத்திற்கு சில விடயங்களை கொண்டு வருகின்றோம்.

சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் எமக்கான நீதியை நிலை நாட்ட கோரி மகஜர் கையளித்திருந்தோம். இன்று தங்களிடமும் எமது கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

எமது இப்போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து (20.02.2017) இதுவரை, தமது பிள்ளைகளுக்காக நீதி கோரிய 78 தாய் தந்தையர்கள் மரணமடைந்து விட்டனர். நாமும் எமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கான நீதி கிடைக்கப்பெறாமலே எமது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.

எமது உறவுகள், இலங்கை அரசபடைகளாலும், அரச புலனாய்வாளர்களாலும், துணைஇராணுவகுழுக்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். எமது உறவுகளை தேடி அலைந்ததுடன், பல அரச அரசசார்பற்ற அமைப்புக்களிடமும் முறையிட்டும் உள்ளக பொறிமுறைகளில் நீதி கிடைக்காத நிலையில், நீதிகோரியும், சர்வதேச தலையீட்டுடனான விரைவான நீதியைக்கோரியும் 1347 நாட்களுக்கு மேலாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டங்களையும், கவனயீர்ப்பு போராட்டங்களையும் நடாத்தி வருகின்றோம்.

எமக்கான நீதி கிடைப்பதற்கு பதிலாக, நாம் பாதுகாக்கப்படுவதற்கு பதிலாக அரசினாலும் அரச பாதுகாப்பு படையினராலும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றோம். எமது அமைப்பின் அங்கத்தவர்கள் மறைமுகமாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் மன அழுத்தங்களை தரும் வகையில் ஏனைய குடும்ப அங்கத்தவர்களை கைது செய்வது, குடும் அங்கத்தவர்களை அச்சுறுத்துவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், நாம் அமைதியாக இருக்கும்போதே தடையுத்தரவுகளை வழங்கியும், விசாரணைக்கு அழைத்தும் அச்சுறுத்துகின்றனர்.

இதனால் மனவுளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்குகின்றனர். இதனூடாக எமது ஜனநாயரீதியான நீதி கோரும் போராட்டத்தை கைவிடச்செய்வதற்காக பலவழிகளிலும் அழுத்தங்களை வழங்கி வருகின்றனர். வடக்கு மாகாணத்தில், 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழரின் விடுதலைப் போராட்டமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டதனை தொடர்ந்து, ஒரு நாளேனும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கத்தவராகவோ, ஆதரவாளராகவோ இருந்திருப்பினும் தம்மிடம் சரணடையுமாறும், புணர்வாழ்வளிக்கப்பட்டு மீள விடுதலை செய்வதாகவும் இலங்கை இராணுவத்தினர் உறுதியளித்ததைத்தொடர்ந்து எமது  பிள்ளைகள் மற்றும் உறவினர்களை எமது கையாலேயே இராணுவத்தினரிடம் கையளித்தோம்.

அத்துடன் பலர் தமது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தாமாக முன்வந்து இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் சரணடைந்தமைக்கான கண்கண்ட சாட்சிகளாக நாம் வாழந்துகொண்டிருக்கின்றோம். நாம் மரணமடைவதற்கு முன்னர் தாங்கள் எமக்கு பொருத்தமான நீதியை பெற்றுத்தருவதற்கான உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கு கிழக்கில், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வசித்த பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை தேடிய சில உறவினர்களும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களும் வன்முறைகளுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், இலங்கை இராணுவத்தினர், வலிந்து காணாமலாக்கப்பட்டதுடன், பாதுகாப்பு வலயமென அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் ஆழ ஊடுறுவும் படையினர் கிளைமோர் தாக்குதலையும், விமானபடையினர் மூலம் கொத்துக்குண்டு, இரசாயன குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டதுடன் பல்குழல் எறிகணைத் தாக்குதலையும் மேற்கொண்டனர்.

இதனால் பாடசாலை, மதத்தளங்கள், மருத்துவமனைகளும் பாதிக்கப்பட்டதுடன் அதில் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சாவடைந்ததுடன் அங்கவீனமடைந்துமுள்ள நிலையிலும், பலர் நச்சு குண்டுகளால் பாதிக்கப்பட்டு நிரந்தர நோயாலும் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்களை அன்றி வேறு யராலும் நீதியை பெற்றுக்கொடுக்க முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இக்கினியாகலையில், 1958ம் ஆண்டு சீனித்தொழிற்சாலையில் ஆரம்பிக்கப்பட்ட படுகொலைகள் 1977,1983 என தொடர்ந்த படுகொலைகள் முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தன.

இப் படுகொலைகளை சர்வதேசம் உரிய முறையில் தட்டிக்கேட்காத காரணத்தால் சர்வதேச நாடுகளையும் தமது படுகொலையின் பங்காளியாக்கியுள்ளது இலங்கை அரசாங்கம்.

மேலும், தமிழ் மக்களின் பூர்வீகக்காணிகளும், மேச்சல்தரைகளும், மதத்தளங்களும், வரலாற்று சின்னங்களும், மகாவலி திட்டம், வனவளப்பாதுகாப்பு, பௌத்த கோவில்கள், இராணுவமுகாம், சிங்கள குடியேற்றம் என திரிவுபடுத்தப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலப்பறிப்புக்களால் உள்நாட்டில் பூர்வீகக்குடிகளான தமிழர் உள்நாட்டிற்குள் அகதிகளாக்கப்பட்டு வருகின்றோம்.

மேலும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெவ்வேறு நீதிகளே உள்நாட்டில் வழங்கப்படுகின்றது. உதாரணமாக கூறுவதாயின், மிருசுவிலில் 8 தமிழர் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர், பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு உயர்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுபோல் செம்மணி புதைகுழி மற்றும் கிருசாந்தி படுகொலையில் குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதும் , குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அச்சுறுத்துவதும் , தமிழராயின் விசாரணையின்றி அரசியல் கைதிகளாக தடுத்துவைத்திருக்கும் அதிசயமும் இந்த நாட்டில் நடைபெற்று வருவதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருவதுடன், இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் சிறுபான்மையினத்தவரையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி சிங்கள பௌத்த அரசியல் நலன்களை நிலைநாட்டி வருகின்றது.

பிராந்திய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் சர்வதேச நாடுகளுக்கு இடையிலான பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான போட்டிகளையும் பகைமைகளையும் தமக்கு சாதகமாக்கிகொள்ளும் இலங்கை அரசாங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்து வருகின்றது.

எனவே தாங்கள், இலங்கையில் தமிழர் தமது பூர்விக நிலமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வழிசெய்யுமாறு கேட்டுக் கொள்வதுடன், எமக்கான உரிய நீதி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என கனகரஞ்சனி தெரிவித்ததுடன். வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் கோரிக்கையடங்கிய மகஜர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.