முஸ்லீம் மாணவிகளுக்கு மனஉளைச்சல் வன்மையாகக் கண்டிக்கிறோம் – உலமாக்கள்

பரீட்சை மண்டபங்களில் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அ.இ.ஜ.உ சபை வெளியிட்டுள்ள அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடளாவியரீதியில் கா.பொ.த உயர் தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. இப்பரீட்சைக்கு முகம் கொடுக்கின்ற முஸ்லிம் மாணவிகள் பர்தாக்களுடன் பரீட்சை எழுத அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.எனினும் நாட்டின் சிலபாகங்களில் கல்வி அதிகாரிகள் பர்தா அணிந்து சென்ற மாணவிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர். இதனால் இம்மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளானமை பெரும் கவலையளிக்கிறது.

அதிகாரிகளின் இந்தப் பாரபட்சமான போக்கைநாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம் பெற்றிருந்தபோதும் அதற்கான அனுமதியை பரீட்சைத் திணைக்களம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை நிலைய அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் மாணவிகள் மன உளைச்சளுக்குள்ளாகி பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே இவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் உரிய அதிகாரிகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும். அவசரமாக நிரந்தர தீர்வொன்றை மாணவிகளுக்கு பெற்றுக் கொடுக்க இவர்கள் முன்வர வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.