முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழித்தமை அதிர்ச்சியனிக்கின்றது – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை கவலையுடன் கூடிய அதிர்ச்சி அளித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பரிதாபமாக உயிர்நீத்த எமது தமிழ் உறவுகளின் ஆத்ம திருப்தியின் அடிப்படையில் இறை மன்றாட்டத்தின் அடிப்படையில் நினைவு கூர்வதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி 2021 01 7ம் திகதி இரவு வேளையில் தகர்த்து அகற்றப்பட்டமை தொடர்பில் வடமாகாண முஸ்லீம் சமுகம் பெரிதும் கவலையுடன்கூடிய அதிர்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறான பேரவலங்கள் நிகழ்ந்தாலும் அதன் மூலம் உயிர் நீக்கும் மனித உறவுகளை நினைவு கூர்வது சகல சமூகங்களிலும் மனிதாபிமான ரீதியாக பின்பற்றப்பட்டு வரும் கிரியையாகவே முக்கியப்படுத்தப்படுகின்றது.

இந்த வகையில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிகழ்ந்த செயற்கை அனர்த்தம் காரணமாக வயது, பால் இனம், மத பாகுபாடுகளுக்கப்பால் பல மனிதப் பிறவிகள் மற்றும்  யாழ் பல்கலைக்கழக சமுகத்தினர்  உயிர் நீத்தமை எமது ஒவ்வொருவரது மனங்களிலும் இன்றுவரை நிழலாடிக்கொண்டே இருக்கின்றது.

இவ்வாறு உயிர் நீத்த சகல மனிதர்களையும் பாகுபாடு அற்ற வகையில் மனிதாபிமான அடிப்படையில் நினைவு கூரும் முகமாக யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியானது பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் தகர்த்து அகற்றப்பட்டமை தொடர்பில் சமூகத்தினர் உறவுகளுக்காக  பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த மக்களுடன் நாமும் இணைந்து அவர்களது துன்பத்தில் பங்கு பெறுவதுடன் நடைபெற்ற இச்சம்பவத்திற்காக எமது அதிருப்தியையும்  கவலையையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.