முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தது காட்டுமிராண்டித்தனம்-வ. கௌதமன் கடும் கண்டனம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி, இலங்கை அரசாங்கத்தால் இடித்தழிக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள  தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ.கெளதமன்,

“உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. மனித குலத்தால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் ரசாயனக் குண்டுகளையும் வீசி இரக்கமற்ற முறையில் இலங்கை அதிகார வர்க்கம் எம் தமிழர்களை பச்சை படுகொலை செய்தது.

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்து 12 ஆண்டுகள் கடந்தும் கூட நீதி கிடைக்காத நிலையில் உலகத் தமிழினம் போராடிக் கொண்டிருக்கிற இச்சூழலில் எங்களின் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இன அழிப்பாளர் கோத்தபாயா ராஜபக்சேவின் வழிகாட்டுதலின்படி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீ சற்குணராஜா அவர்களின் தலைமையில் தலைக்கவசம் அணிந்து வந்த இராணுவக் கும்பல் பாதுகாப்பளிக்க இரவோடு இரவாக இடித்து தள்ளியிருப்பது கோழைத்தனத்துடன் கூடிய காட்டுமிராண்டித்தனம். இதனை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

எப்பொழுதுமே நேர்மையற்ற, அறமற்ற முறையில் இனப்படுகொலை செய்யும் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு இச்செயல் ஒன்றும் புதிதல்ல. நீங்கள் நினைக்கலாம் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை அழித்துவிட்டால் தமிழர்களின் மனதிலிருக்கும் நினைவு சுவடுகளை அழித்து விடலாம் என்று. வடக்கிலோ கிழக்கிலோ இருக்கின்ற எம் இனத்தின் இளைய தலைமுறை மாணவ செல்வங்களின் மனதிலிருக்கும் வலிமிகுந்த யுத்த வடுக்களை ஒருபோதும் அழிக்க முடியாது. “எழும் சிறுப்பொறி மிகப் பெரும் தீயாய்” என்கிற இயற்கையின் பேருண்மையை உள்வாங்கி ஓர்நாள் அந்த மனங்கள் எரிமலையாய் வெடிக்கும். இதனை அறியாத சிங்கள அதிகாரவர்க்கம் சிறுபிள்ளைத்தனமாக எம் இனவழிப்பின் நினைவுச் சின்னத்தை சிதைத்திருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதியாக சொல்வோம். எங்கள் நினைவு சின்னங்களையும் எங்களின் கலை, பண்பாடு மற்றும் வரலாற்று பதிவுகளையும், ஏன் எங்களின் வரைபடத்தையும் கூட நீ அழிக்கலாம். நீங்கள் அழிக்க அழிக்கத்தான் எங்களுக்கு சூடும் சொரணையும் வரும் அல்லது கூடும். விரைவில் எங்களுக்கான உறுதியான இறுதி தீர்வை எட்டுவதற்கான திட்டத்தினை உருவாக்க நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள். உங்களின் அத்துமீறலை தொடர்ந்து கொண்டேயிருங்கள்.

இவ்வுலகின் நீதிமன்றங்களும் மனிதம் காக்க உருவாக்கப்பட்ட ஐநா சபையும் இன்னும் எவ்வளவு காலம்தான் உங்களுக்கு துணை நிற்கும் அல்லது உங்கள் அடக்குமுறைக்கு அரணாக காத்து நிற்கும் என்று நாங்களும் பார்க்கிறோம். தொடர்ந்த இக்கு௹ரங்களை உலகம் கணக்கில் எடுக்கிறதோ இல்லையோ ஐம்பதனாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழினத்தின் இளைய தலைமுறை நடப்பதனைத்தையும் நெஞ்சத் தகிப்போடு உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.

வரலாறு கூட சில நேரங்களில் மறைக்கப்படலாம் அறிவியலை ஒரு போதும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. “ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு”எனத் தெரிவித்துள்ளார்.