முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவேயில்லை; விகாரை மாத்திரமே காணப்பட்டது – சிங்கள பா.உ

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவேயில்லை. ஆரம்பத்திலிருந்து குருகஹந்த என்ற பௌத்த விகாரை மாத்திரமே காணப்பட்டது. அந்த விகாரையின் விகாரதிபதியே சில இந்து தெய்வங்களின் சிலைகளை குறித்த விகாரையில் வைத்து பூஜித்தார். அதேபோன்று இது பௌத்தர்களின் வணக்கத்திற்குரிய இடமாகவே காணப்பட்டது என்பதற்கு வரலாற்று ரீதியாகவும், தொல்பொருள் திணைக்களத்தினதும் ஆதாரங்கள் உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு நாயாறு குருகஹந்த விகாரை தொடர்பில் ஆராய்ந்து அதன் வரலாறு மற்றும் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட பின்னரே இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் கருத்து வெளியிட வேண்டும்.

அவ்வாறின்றி இதனைப் பயன்படுத்தி தேவையற்ற விதமாக பௌத்தர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கக் கூடாது.எனவே வரலாற்றையும், உண்மையையும் சரியாக ஆராயாமல் பௌத்த மற்றும் இந்து மதத்தை மையப்படுத்தி சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு எவரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறினார்.

பத்தரமுல்லையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.