மீனவா் பிரச்சினைக்கு தீா்வு இல்லையெனில் அமைச்சா் பதவியை ராஜினாமா செய்து போராடுவேன் – டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

“இந்திய மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைத் தொடர்ந்து பிரயோகித்தால் எனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு எமது கடற்றொழிலாளர்களோடு சேர்ந்து இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகப்போராடத் தயாராகவுள்ளேன்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் இந்தியத் தூதுவரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். அதிகாரப் பரவலாக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு சம்பந்தமான ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. நீண்டகாலமாக நான் முன்வைத்து வந்த 13ஆவது திருத்தத்தை வரலாறும், யதார்த்தமும் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தி இருந்தேன்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லி சென்று பல்வேறு தரப்புக்களையும் சந்தித்திருந்தார். ஆனால், எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினை பற்றி ஒரு கருத்தும் அவர் கூறவில்லை. அதுபோல் சமீபத்தில் வடக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்தியத் தூதுவர் சந்தித்திருந்தார். அங்குகூட எங்களுடைய கடற்றொழில் மக்களின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்படவில்லை. எனினும், நான் கூடுதலான நேரம் இந்திய மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் எங்களுடைய வளங்களும் மீனவர்களுடைய வாழ்வாதாரமும் அழிக்கப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

இலங்கைக் கடற்பரப்பில் ஒரு வினாடிகூட தடை செய்யப்பட்ட சட்டவிரோத தொழிலுக்கு இடம் இல்லை என்பதையும்
வலியுறுத்தியுருந்தேன். மேலும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் தொழில் செய்வதற்கான அழுத்தங்களை இந்தியா, இலங்கை அரசுக்குத் தொடர்ந்து பிரயோகித்தால் நான் அமைச்சரவையில் இருந்து இராஜிநாமா செய்து எமது கடற்றொழிலாளர்களோடு சேர்ந்து கடலில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்குத் தயாராக இருப்பேன் என்பதையும் சொல்லி இருந்தேன்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதான இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அது அவர்களுடைய கோரிக்கை. ஆனால், இதனை சட்டரீதியாக நாங்கள் பார்க்க வேண்டும். எதிர்வரும் 3 ஆம் திகதி வடக்கு மீனவர்களால் நடுக்கடலில் கறுப்புக் கொடி போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. நான் அமைச்சராக உள்ளதால் அந்தப் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்ளமாட்டேன். ஒரு வேளை அதற்குள் எனது பதவியை இராஜிநாமா செய்தால் அந்தப் போராட்டத்தில் நிச்சயம் கலந்துகொள்வேன்” என்று அமைச்சா் தேவானந்தா தெரிவித்தாா்.