மியன்மாா், ரஷ்யாவுக்கு உயா் குழுவை அனுப்புகிறது ஐக்கிய மக்கள் சக்தி

image 6483441 3 மியன்மாா், ரஷ்யாவுக்கு உயா் குழுவை அனுப்புகிறது ஐக்கிய மக்கள் சக்தி
மியன்மார் பயங்கரவாதப் பிடியிலும், ரஷ்யப் போரின் மத்தியில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இராஜதந்திர ரீதியான முன்னெடுப்பில் இறங்கியிருக்கின்றது. இந்த இரு நாடுகளுக்கும் உயா் மட்டக் குழு ஒன்றை அக்கட்சி அனுப்பவுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் மட்ட வேலை வாய்ப்புகள் வழங்குவதான வாக்குறுதிகளுடன் ஏமாற்றப்பட்டு, மியன்மாருக்கு அழைத்து வரப்பட்டதன் பிற்பாடு, மியன்மாரில் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்கள் மற்றும் அதிக சம்பளம் தருவதாக ஏமாற்றப்பட்டு, ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய-உக்ரேனியப் போரின் முன்னிலை வரிசையில் கட்டாயப்படுத்தப்பட்டு தள்ளப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்டு, அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டுதலின் பேரில் ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பிரதிநிதிகளை அந்நாடுகளுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவத்துவல, கே.சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் மியன்மார் மற்றும் ரஷ்யாவிற்கு புறப்பட்டுச் சென்று, எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி, அந்த இலங்கையர்களுக்காக மேற்கொள்ள முடியுமான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளது.

ரஷ்யாவில் சுமாா் ஆயிரம் வரையிலான இலங்கையா்கள் இராணுவத்தில் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவா்களுடைய நிலை, அவா்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடா்பில் இந்தக் குழு பேச்சுவாா்த்தைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.