மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ – ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் ரஷ்யா , உக்ரைன்..

ரஷ்யாவிற்குள் உக்ரைன் படைகள் நுழைந்ததை அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்ட நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டும் நிலையில், போரின் போக்கை மாற்ற ரஷ்யா சுயதாக்குதல் நடத்தியதாக உக்ரைன்  தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 2022-ம் ஆண்டு பெப்ரவரியில் தொடங்கிய பிறகு முதன் முறையாக ரஷ்ய எல்லைக்குள் 30 கி.மீ. வரை உக்ரைன் படைகள் முன்னேறியுள்ள பின்னணியில் ஜப்போரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் அந்தப் படைகளே தீ வைத்து கொளுத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி  தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் தாக்குதலால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஐ.நா.வின் அணு ஆயுத கண்காணிப்பு அமைப்பு, அந்த அணுமின் நிலையத்தில் இருந்து கடுமையான புகை வந்ததாகவும், அணுசக்தி பாதுகாப்பில் இதனால் எந்தவொரு தாக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.